Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெரம்பலூர் அருகே விநாயகர் சதுர்த்திக்காக தயாராகும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள்

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி அதன் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்து விட்ட விநாயகர் சதுர்த்திவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி பிரம்மண்டமாகக் கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவிற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு பிரதிஷ்டை செய்யக்கூடிய பிரம்மாண்ட சிலைகள் தயாரிக்கும் பணிகள் 2-வாரங்களுக்கு முன்பே முழுவீச்சில் தொடங்கிவிட்டன.

குறிப்பாக விநாயகர் சதுர்த்திக்குப் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள், எளிதில் கரையக் கூடிய வகையிலும், நீர் நிலைகளை பெரிதும் மாசு படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாடு காவல்துறையும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் நிலையில், இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு, பெரம்பலூர்-துறையூர் சாலையில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி எதிரே அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கூடாரத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, இரண்டு அடி முதல் எட்டு அடி வரை உயரம் உள்ள சிலைகள் அரக்கோணம் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டு, அச்சுவார்க்கும் முறையில் சிலையமைக்கும் சிற்பிகளைக் கொண்டு உடலின் வெவ்வேறு பாகங்களாக அச்சுவார்க்கப்பட்டு, பின்னர் அவை ஒன்றோடு ஒன்று பொறுத்தி, மாவு கொண்டு இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

தற்போது வெண்ணிற மாவைக் கொண்டு அச்சுவார்க்கப்பட்டு, பின்னர் அவை பிரித்தெடுத்து காய்ந்த பிறகு இணைத்து வடிவமைக்கும் பணிகள் நடக்கும். அதன் பிறகு வண்ணம் பூசும் பணிகள் அடுத்த கட்டமாக நடைபெறும். இருப்பினும், இப்போதே அந்த சிலைகள் கற்பக விநாயகர், சித்தி விநாயகர், ஆனைமுக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு பெயர்களை கொண்ட விநாயகர் வடிவங்களாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இந்த விநாயகர் சிலைகள் ஆயிரம் ரூபாய் முதல், 20,000 ரூபாய் வரைக்கும் விலை வைத்து விற்கப்படும் அளவிற்கு மிக பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதனை பெரம்பலூர் - துறையூர் சாலையில் செல்லும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கோயில் முக்கிய பிரமுகர்கள், இளைஞர் மன்றத்தினர் நேரில் கண்டு இப்போதே தங்கள் ஊர்களில் பிரதிஷ்டை செய்ய, எத்தனை ரூபாயில், எவ்வளவு உயரத்திற்கு விநாயகர் சிலைகள் தேவை என ஆர்டர்களை சொல்லி விட்டு, அட்வான்ஸ் தொகைகளை கொடுத்து விட்டுச் செல்லுகின்றனர்.