Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாஞ்சில் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் நல்லமிளகு!

குமரி மாவட்டத்தில் விளையும் பல்வேறு பணப்பயிர்களில் நல்லமிளகுக்கு ஒரு தனித்த இடம் உண்டு. மலை சார்ந்த பூமி என்பதால் இங்குள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் குறைந்தது 10 நல்லமிளகு செடிகளையாவது சாகுபடி செய்திருப்பார்கள். வருமானம் ஒருபுறம் என்றாலும் வீட்டுத் தேவைக்காகவும் இந்த நல்லமிளகை சாகுபடி செய்வார்கள். அந்த வகையில் குமரி மாவட்டம் மேக்கியாமண்டபத்தை அடுத்த பூந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஞானதாஸ் என்ற விவசாயி நல்லமிளகுச் செடிகளை சாகுபடி செய்திருப்பதோடு, அதன் கன்றுகளை உற்பத்தி செய்தும் ஒரு கணிசமான வருமானத்தைப் பார்த்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் அவரை சந்தித்துப் பேசினோம். ``சமூக நலத்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறேன். நமது ஓய்வுக்காலத்தை பயனுள்ள காலமாக மாற்றலாமே என விவசாயத்தில் ஈடுபடுகிறேன். கரும்பாறை பகுதியில் எனக்கு சொந்தமாக 2 ஏக்கர் ரப்பர் தோட்டம் இருக்கிறது. இந்தத் தோட்டத்தில் சுமார் 25 சென்ட் நிலத்தில் நல்லமிளகு செடிகளை வளர்த்து வருகிறேன். பிரேசில் நாட்டின் திப்பிலி செடியையும், நல்லமிளகு செடியையும் ஒட்டுக் கட்டி உருவாக்கப்பட்ட ஒரு வகை நல்லமிளகு செடி இது. கைரைலி என்ற ரகத்தைச் சேர்ந்த இந்தச் செடியை உற்பத்தி செய்து சாகுபடி செய்கிறேன். அதில் இருந்து கிடைக்கும் நல்லமிளகை விற்பனை செய்கிறேன். இது ஆண்டு முழுக்க விளைச்சல் கொடுக்கும் ரகமாக இருக்கிறது.

நல்லமிளகு செடிகளுக்கும், ரப்பர் மரங்களுக்கும் இயற்கை உரங்களைத்தான் பயன்படுத்துகிறேன். ரப்பர் மரங்களுக்கு இடையே உள்ள பகுதியில் 2 ஆயிரம் காப்பிச் செடிகளை சாகுபடி செய்திருக்கிறேன். காப்பிச் செடிகளை சாகுபடி செய்து சுமார் 4 மாதங்கள் ஆகிறது. எனது தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகள், மரங்களுக்கு மண்புழு உரம், மீன் அமிலம் போன்ற இயற்கை உரங்களைக் கொடுக்கிறேன். இங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள நல்லமிளகு செடிகளைப் பார்த்து, பல விவசாயிகள் இந்தச் செடிகளின் கன்று கிடைக்குமா? என கேட்டார்கள். அதன்பிறகுதான் இந்தச் செடிகளை நாமே உற்பத்தி செய்து விற்கலாமே என முடிவு செய்தேன். ஆனால் அது உடனடியாக சாத்தியம் ஆகவில்லை. என்னிடம் உள்ள கைரைலி ரக நல்ல மிளகு செடிகளில் இருந்து கன்றுகளை எடுத்து விற்பனை செய்வது பெரிய சவாலான காரியமாக இருந்தது. அதனால் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் தெக்கன் 2, கும்பகல் ஆகிய ரகங்களை வாங்கி அதில் இருந்து கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம் என முடிவெடுத்தேன். இந்த இரு ரக செடிகளும் தேசிய விருது பெற்ற ரகங்கள். தெக்கன் 2 ரகத்தைச் சேர்ந்த தாய்ச் செடிகளை கேரள மாநிலம் இடுக்கி கட்டப்பனை பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்பவரிடம் இருந்து 100 எண்ணிக்கையில் வாங்கி வந்தேன்.

அதேபோல் கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளியை சேர்ந்த லிஜோவர்க்கீஸ் என்பவரிடம் இருந்து கும்பகல் ரக செடிகள் 100 எண்ணிக்கையில் வாங்கி வந்தேன். அவற்றை எனது தோட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ெஷட் போட்டு வைத்து, அதில் இருந்து கன்றுகளை உற்பத்தி செய்யத் தொடங்கினேன். பலரும் வந்து வாங்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். இப்போது கன்று உற்பத்தியை கொஞ்சம் அதிகப்படுத்த துவங்கி இருக்கிறேன். தேங்காய் நார்க்கழிவு, மண்புழு உரம் போன்றவற்றை ஒரு சிறிய பேக்கில் போட்டு, அதில் நாங்கள் உற்பத்தி செய்த நல்லமிளகுக் கன்றுகளை இருப்பு வைப்போம். அதில் தேவைக்கு ஏற்ப நீர்ப்பாசனம் செய்வோம். பின்பு உரிய காலத்தில் அவற்றை விற்பனைக்கு கொடுப்போம். கன்று ஒன்றை ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்கிறேன். வெளி மார்க்கெட்டில் நல்ல மிளகு கன்றுகளை ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்கிறார்கள். இந்த நல்லமிளகுச் செடிகளை அனைத்து மாவட்ட விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் விலையைக் குறைத்து விற்பனை செய்கிறோம். இதன்மூலம் மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது.

முதலில் தாய்ச் செடியில் இருந்து கன்றுகளை உற்பத்தி செய்வதற்கு 3 மாத காலம் வரை ஆகும். அதனைத் தொடர்ந்து நாம் தொடர்ச்சியாக கன்றுகளை உற்பத்தி செய்து வரலாம். தற்போது என்னிடம் 1500க்கு மேற்பட்ட நல்லமிளகுக் கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. நல்லமிளகுக் கன்றுகள் உற்பத்தி செய்யும்போது, அதற்கும் இயற்கை உரத்தைப் பயன்படுத்துகிறேன். நான் சாகுபடி செய்யும் அனைத்து பயிர்களுக்கும் இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறேன். இதனால் இந்த வருடத்தின் இயற்கை வேளாண்ைமக்கான மாநில அளவிலான விருது எனக்கு கிடைத்திருக்கிறது’’ என பெருமையுடன் தெரிவித்தார்.

(நல்ல மிளகு சாகுபடியில் இயற்கை வழி பராமரிப்பை மேற்கொண்டு வரும் ஞானதாசின் சில குறிப்புகள் அடுத்த இதழில் இடம்பெறும்)

தொடர்புக்கு:

ஞானதாஸ்: 81225 58960.