Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

நல்ல மிளகு...ரப்பருக்கு நல்ல மாற்றுப்பயிர்!

தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் ரப்பர், வாழை, நெல், தென்னை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதனைத் தவிர்த்து வேறு சில புதுமையான பயிர்களையும் சில விவசாயிகள் சாகுபடி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் கூட்டாலுமூடு அருகே உள்ள பைங்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ராமையன் என்பவர், தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் நல்லமிளகு சாகுபடி செய்து அசத்தி வருகிறார். அவரைச் சந்தித்து நல்லமிளகு சாகுபடி குறித்து பேசினோம். ``1978ல் பிஎஸ்சி இயற்பியல் முடித்தேன். அதன்பிறகு வேலை தேடி சென்னைக்கு சென்றுவிட்டேன். பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைதேடிய நிலையில் முடிவில் காவல் துறையில் அமைச்சுப் பணியில் இடம் கிடைத்தது. நான் 31 வருட காலம் அமைச்சுப் பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றேன்.

குமரி மாவட்டத்தை ஒட்டிய கேரள எல்லைப்பகுதியான பனிச்சமூடுதான் எனது மனைவிக்கு சொந்த ஊர். அங்கு எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் ரப்பர் மரங்களை சாகுபடி செய்திருந்தேன். ரப்பர் மரத்தில் எனக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. வேலைக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால், ரப்பர் மரங்களை வெட்டி அகற்றிவிட்டு நல்லமிளகு சாகுபடி செய்ய முடிவு செய்தேன். இதற்காக கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கடந்த 8 வருடத்திற்கு முன்பு நல்லமிளகு கன்றுகளை வாங்கி வந்து சாகுபடி செய்தேன்.

சுமார் 550 நல்லமிளகு கன்றுகளை சாகுபடி செய்தேன். நல்லமிளகு செடிகளைப் பொருத்தவரை வீரிய ரகத்தில் நோய்தாக்குதல் அதிகமாக இருக்கும். நாட்டு ரக நல்லமிளகு கன்றுகளை சாகுபடி செய்தால், நோய்தாக்குதல் குறைவாக இருக்கும். ஆனால் நான் விஜய், கும்பகல், தெக்கன், அகழி உள்ளிட்ட வீரிய ரக நல்லமிளகு கன்றுகளையே சாகுபடி செய்திருக்கிறேன். நல்லமிளகு செடிகளை படர்த்திவிடுவதற்கு மரங்கள் தேவை. அதற்காக பூவரசு, மகோகனி, பலா உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்திருக்கிறேன். அந்த மரங்களில் நல்லமிளகு கொடிகளை படர விட்டிருக்கிறேன்.

நல்லமிளகு செடிகளுக்கு சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதற்காக ஆழ்துளை கிணறு அமைத்துள்ளேன். அதன்மூலம் வாரத்திற்கு இருமுறை தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். இயற்கை உரங்களை பயன்படுத்தினாலும் சரி, ரசாயன உரங்களை பயன்படுத்தினாலும் சரி ஒரே மகசூல்தான் கிடைக்கும். நான் ஒரு கன்றுக்கு மாட்டுசாணம், வேப்பம்புண்ணாக்கு, எலும்புபொடி ஆகியவற்றை வைப்பேன். வருடத்திற்கு இரண்டு முறை உரம் வைத்து வருகிறேன்.

எனது தோட்டத்தில் இருந்து கிடைக்கும் நல்லமிளகு மகசூலை, காய் பருவத்தில் கொடுக்கும்போது கிலோ ரூ.230க்கு கொள்முதல் ெசய்கின்றனர். இதனை வெயிலில் உலரவைத்து நன்றாக உலர்ந்த பிறகு கொடுக்கும்போது ஒரு கிலோ நல்ல மிளகு ரூ.700க்கு கொள்முதல் ெசய்கின்றனர். நான் பெரும்பாலும் காயாகவே விற்பனை செய்து விடுகிறேன். இதற்கு காரணம் நல்லமிளகை காயவைப்பதற்கு 3 முதல் 4 நாட்கள் ஆகும். ஒரு கிலோ உலர்ந்த நல்லமிளகு கிடைக்க நல்லமிளகு காய் 3 கிலோ முதல் 3.5 கிலோ வரை பயன்படுத்த வேண்டும். இந்த சிக்கலை தவிர்க்க காய் பருவத்தில் விற்று விடுகிறேன்.

மரங்களில் செடிகளை படரவிடுவது, அதனை கவாத்து செய்வது, காய்களை பறிப்பது, தோட்டத்தில் உள்ள புற்களை அகற்றுவது, உரங்கள் வைப்பது என எல்லா பணிகளையும் வேலையாட்களை கொண்டே செய்து வருகிறேன். இதனால் எனது தோட்டத்தில் கிடைக்கும் நல்லமிளகு வருமானம் வேலையாட்கள் மற்றும் உரசெலவிற்குசென்றுவிடுகிறது. தோட்டத்தில் 100 கமுகு (பாக்கு) உள்ளது. தற்போது அந்த மரங்கள் காய்ப்புக்கு வந்துள்ளன. அந்த மரத்தின் மூடு பகுதியில் நல்லமிளகு கன்றுகளை சாகுபடி செய்துள்ளேன். இதனால் பாக்குமரம் மற்றும் புதிதாக வைத்துள்ள நல்லமிளகு செடிகளில் இருந்து மகசூல் கிடைக்கும்போது நாம் செய்த செலவில் இருந்து கூடுதல் லாபம் கிடைக்க தொடங்கும்’’ என்றார்.

தொடர்புக்கு:

ராமையன்: 80561 46251.

மரம் மூலமும் வருவாய்நல்லமிளகு செடிகளை படரவிடுவதற்கு மகோகனி, பூவரசு, பலா, சீமைக்கொன்றை போன்ற மரங்களை சாகுபடி செய்திருக்கிறேன். இதில் சீமைக்கொன்றையை தவிர மற்ற மரங்கள், பலகை தயாரிப்புக்கு ஏற்றவையாகும். நல்லமிளகில் போதிய வருவாய் கிடைக்காவிட்டால் கூட, ஒரு குறிப்பிட்ட வருடங்கள் கடந்த பிறகு மரங்களை ெவட்டி விற்பனை செய்யும்போது அதிக வருவாய் கிடைக்கும் என்கிறார் ராமையன்.