Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் ரூ.80 கோடியில் மிகப்பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை காண படையெடுத்த மக்கள்: குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டனர்

சென்னை: மிகப்பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட்ட சென்னை வள்ளுவர் கோட்டத்தை காண நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒவ்வொருவரும் குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டனர். கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிர்வது பார்வையாளரை வெகுவாக கவர்கிறது. முன்னாள் முதல்வர் கலைஞரால் 1974, 1975 ஆகிய ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது சென்னை மாநகரின் கலைச்செல்வம் வள்ளுவர் கோட்டம். இந்த வள்ளுவர் கோட்டம் சுற்றுலா மையமாக எழுச்சிபெற்று உலகத் தமிழ் அறிஞர்களாலும், தமிழ்நாட்டு மக்களாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தின் முன் நிறுவப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அவருடைய பிறந்தநாளின் போது மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு செல்லும் போது வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.

அப்போது, முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியில் பராமரிக்கப்படாமல் பாழ்பட்டிருந்த வள்ளுவர் கோட்டத்தின் தோற்றத்தைப் பார்த்து மிகவும் நொந்து வேதனைக்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தை புதுப்பித்திட வேண்டும் என்ற உணர்வோடு திட்டமிட்டு ரூ.80 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெறும் என்று அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தார்.

அதன் பயனாக, வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டு எழிற்கோலம் கொண்டுள்ளது. தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டு 20,000 சதுர அடி பரப்பளவில் 1,548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான “அய்யன் வள்ளுவர் கலையரங்கம்” மேம்படுத்தப்பட்டுள்ளது. கலைஞரின் உரை விளக்கத்துடன் 1,330 திருக்குறள்களையும் கொண்ட குறள் பலகைகள் அமைக்கப்பட்டு-ஓவியங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ளது “குறள் மணிமாடம்”. 100 பேர் அமரும் வசதியுடன் “திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம்” இலக்கிய விவாதங்கள் ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 27,000 சதுர அடி பரப்பில் தரை நிலை, தரையின் கீழ் நிலப்பகுதிகளில் 162 கார்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிட வரும் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் 3,336 சதுர அடியில் உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது.

உணவகப் பகுதியில் 72 பேர் அமரவும், காபி அருந்தும் பகுதியில் 24 பேர் அமரக் கூடிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. 275.56 சதுர அடி பரப்பளவு கொண்ட நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அருகே அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையை நோக்கிப் பார்வையாளர்கள் தடையின்றிச் செல்வதற்கு வசதியான மூடிய நடைபாதையுடன் கூடிய “வேயா மாடம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர்த் தேர் வடிவில் 106 அடி உயரமுடைய திருக்குறள் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையிடும் பொதுமக்கள் உள்ளம் மகிழும் வகையில் இசை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மகத்தான முறையில் புனரமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று சென்னைவாசிகள் பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை பார்வையிடுவதற்காக நேற்று காலை முதல் வரத் தொடங்கினர். அது மட்டுமின்றி அருகில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பார்ப்பதற்காக வந்தனர். அவர்கள் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை ஒவ்வொரு இடமாக சென்று பார்வையிட்டனர். அதுவும் குடும்பத்துடன் வந்து பார்வையிட்ட காட்சியை காண முடிந்தது. மாலை 4 மணிக்கு மேல் கூட்டம் என்பது இரட்டிப்பானது. திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகத்தையும் சுற்றி பார்வையிட்டனர்.

திருக்குறள் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிர்ந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வள்ளுவர் கோட்டத்தை சுற்றி பார்த்த பின்னர் அங்கிருந்த உணவகங்களில் குடும்பத்துடன் உணவு சாப்பிட்டனர். சென்னையின் மையப்பகுதியில், சுற்றுலா பயணிகளின் வரப்பிரசாதமாக இருந்த வள்ளூர் கோட்டம் கடந்த ஆட்சி காலத்தில் கண்டும் காணாமல் போனது. தற்போது பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் சென்னைவாசிகளுக்கு சுற்றுலாத்தலமாக மீண்டும் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.