Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மக்கள் வேதனை

தமிழகத்தில் மாற்றம், மாற்றம் எனக்கூறி மக்கள் வாக்களித்து தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி கட்டிலில் ஏற்றினர். புதிய அரசு, புதிய இன்ஜின் போன்று வேகமெடுத்து செயல்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான் கிடைத்தது. ஆட்சியில் கொலை, பாலியல் வன்கொடுமைகள் போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் மின்வெட்டு பிரச்னை அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சிறுதொழிலதிபர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் ஏற்படும் தொடர்ச்சியான மின்தடையால் பொதுமக்கள் தூக்கமின்மை மற்றும் புழுக்கத்தால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்வெட்டால் உற்பத்தியை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றன. மின் மாற்றிகளில் ஏற்படும் திடீர் பழுது அல்லது பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் அரசு கூறும் விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல. கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களில், முத்தான திட்டங்களில் ஒன்று நான் முதல்வன் திட்டம். இந்த திட்டம் முடக்கப்படுமா? என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி உள்ளன. இத்திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. நான் முதல்வன் என்பது கம்பீரமானது.

இதனை மாற்றுவதால் என்ன பயன் ஏற்படப்போகிறது. மக்களின் உடனடி பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், அரசியல் கட்சிகளை உடைப்பதிலும் நிர்வாகிகளை தன்பக்கம் இழுப்பதிலுமே ஆளுங்கட்சி தீவிரம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த ஆட்சியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றம் செய்வதுதான் சாதனையாக உள்ளது. பெரிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யாமல், அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று விட்டன. அதனை ஈர்ப்பதற்கு எந்த திட்டமும் அரசிடம் இல்லை.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கி ரூ.357 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2,545 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, பிரத்யேக சிறப்பு சீருடைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்கு பதவியேற்கும் நாளில் முதல்வர் விஜய், கையெழுத்து போட்டார். நீண்ட இழுபறிக்கு இடையே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன் நோக்கம் இதுவரை ஒன்றும் நிறைவேறவில்லை. இந்நிலையில் தான், சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சிகளுக்கு, காவல் துறையை வைத்திருக்கும் முதல்வர் விஜய் உடனுக்குடன் குறுக்கிட்டு பதிலளிக்கவில்லை.

அரசின் 40 நாள் ஆட்சியில் புதிய சாதனைகள் எதுவும் நிகழ்த்தப்படவில்லை என்றும், ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டவை முந்தைய திமுக அரசின் திட்டங்களின் நீட்சி மட்டுமே. விஜய் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டில் நம்பர் 1 தொகுதியாக பெரம்பூரை மாற்றியுள்ளார். தமிழ்நாட்டில் மின்வெட்டால் முதன்முறையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது இந்த ஆட்சியில்தான். சென்னை வியாசர்பாடியில் மின்வெட்டால் 4 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதிதாக அரசு பொறுப்பேற்று 40 நாட்கள் தாண்டியும் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்து புதிய உத்வேகத்தை கொடுக்கவில்லை. இதுவரை குறிப்பிடும்படி எந்த சாதனையும் இல்லை என்பதே மக்களின் வேதனையாக உள்ளது.