Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களின் தேவைகளை உடனுக்குடன் சரி செய்ய தங்களுக்கான பொறுப்புகளில் திறம்பட பணியாற்ற வேண்டும்: உதவி பொறியாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை

சென்னை: பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் சரி செய்யும் பொறுப்பை திறம்பட செய்ய வேண்டும் என்று உதவி பொறியாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை வழங்கினார். சென்னை குடிநீர் வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர்களுக்கான பயிற்சி வகுப்பின் நிறைவு விழா சிந்தாதிரிபேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நிகழ்வில், அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பயிற்சி பெற்ற உதவி பொறியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சென்னை மாநகர மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் 2021ம் ஆண்டு வரை நாளொன்றுக்கு 850 எம்எல்டி வழங்கப்பட்டு வந்தது. தற்போது நாளொன்றுக்கு 1300 எம்எல்டி வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகத் துறை என்பது மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு முக்கிய துறையாகும்.

இத்துறையில் பணியாற்ற கூடிய அனைத்து நிலை அலுவலர்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும். அதற்காக தான் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. அன்றாட பணிகளோடு பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் சரி செய்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் ஜி.எஸ்.சமீரன், பொறியியல் இயக்குநர் (பொ) ஓ.பர்வீஸ், இயக்குநர் (பயிற்சி மையம்) பி.சி.வள்ளி, துணை இயக்குநர் (பயிற்சி மையம்) ம.ஸ்ரீதேவி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.