திருப்பூர்: பொதுக்கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பதற்காகத்தான் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். திருப்பூரில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 80 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அடிக்கடி தனது பெயர் வர வேண்டும் என்பதற்காக அண்ணாமலை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரை அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2014ல் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
அந்த தீர்ப்பு தான் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தான் மாநில அரசும், அறநிலையத்துறையும் பின்பற்றி வருகிறார்கள். ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு என்பது தனிப்பட்ட முறையில் குறிக்கோளோடு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பாகத்தான் மக்களும், அரசியல் கட்சிகளும் பார்க்கிறார்கள். இருப்பினும், தமிழக அரசு அதற்கான மேல்முறையீட்டை முறையாக செய்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. எவ்வளவு பேர் கூட்டத்திற்கு வருவார்கள் என்ற விவரங்களை தெரிவித்த உடன் அரசு அதற்கு ஏற்ற இடத்தை வழங்கும். சொன்னதை காட்டிலும் அதிகமாக கூட்டத்தை கூட்டுவார்களேயானால் அதற்குரிய நடவடிக்கையை அரசு கண்டிப்பாக எடுக்கும். கடுமையான சட்ட விதிகள் விதிப்பது என்பது அந்த கட்சியுடைய தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காகவே.
ஏனென்றால், கடந்த ஆண்டு உபியில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு மாநாட்டில் முறையான தகவல்களை மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் வழங்காததால், கூட்ட நெரிசலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சூழல் ஏற்பட்டது.அதேபோல், தமிழகத்தில் கரூரில் நடந்த சம்பவத்திலும் முறையான தகவல்களை தெரிவிக்காத காரணத்தால் 41 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் இந்த அரசு எச்சரிக்கையாக இருக்கிறது. அதற்காகத்தான் விதிமுறைகள் சற்று கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஓ.டி.டி. தளங்களில் புதிய படங்களை வெளியிடுவது தொடர்பான கால அவகாசத்தை நீடிப்பது குறித்த கோரிக்கை பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


