*அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET I&II) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஆட்சியர் கூறுகையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 2025ம் ஆண்டிற்கு ஆசிரியர் தகுதி தேர்விற்கான (TNTET) தாள்-1 தேர்வு வரும் 15ம் தேதி மற்றும் தாள்- II தேர்வு 16ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான தாள்-1ஐ மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களில் 19,908 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வர்கள் தேர்வு மைய அனுமதி சீட்டுடன் தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்திற்குள், தங்களுடைய ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின் நகல் உடன் வருகைபுரிய வேண்டும். அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமரா மூலம் தேர்வுகளை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு மையங்களில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் பள்ளிக் கல்வித்துறை மூலம் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றிட தேவையான போக்குவரத்து வசதி, மின்சாரம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், துணை ஆட்சியர் டியுக் பார்க்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
