Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெரியபாளையம் அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை என மொத்தம் 5 மணி நேரத்துக்கு மேல் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களின் அன்றாட பணிகள் பெரிதும் முடங்கியது.

மேலும், மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமலும், இரவு நேரத்தில் கொசு தொல்லையால் ஏராளமான மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், அப்பகுதியில் சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மின்சாரம் வழங்குவதில் அதிகாரிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்களின் அலட்சியப் போக்கு மற்றும் தொடர் மின்வெட்டை கண்டித்து நேற்று நள்ளிரவு பெரியபாளையம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கன்னிகைப்பேர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவலறிந்ததும் பெரியபாளையம் போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில், கன்னிகைப்பேர் அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை சரிசெய்யும் பணிகளில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

எனினும், தங்கள் பகுதிகளுக்கு சீரான மின் வினியோகம் வழங்கும்வரை இந்த இடத்தைவிட்டு செல்ல மாட்டோம் என்று கிராம மக்கள் உறுதியாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கன்னிகைப்பேர் உள்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சிறிது நேரத்திலேயே மின்சாரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் மக்களிடையே பரபரப்பு நிலவியது.