ஈரான் போர் தொடங்கி வரும் 28ம் தேதியுடன் 3 மாதங்கள் ஆகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 91 முதல் 98 டாலர் வரை விற்பனையாகி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்குள் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மே 15ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றத்தை தொடங்கின. அதனை தொடர்ந்து மே 19, மே 23 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து விலையை உயர்த்திய நிறுவனங்கள், தற்போது 10 நாளில் நேற்று நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் ரூ.107.77க்கும், டீசல் ரூ.99.55க்கும் விற்பனையாகிறது.
அடுத்தடுத்து 4 முறை விலை உயர்த்தப்பட்டிருப்பது சாமானிய மக்களை முற்றிலுமாக பாதித்துள்ளது. இந்த தொடர் உயர்வால் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
லாரி, சரக்கு வாகனங்கள் மற்றும் ரயில்களுக்கான எரிபொருள் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து காய்கறி, பழங்கள் மற்றும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரப்படும் கட்டணம் உயரும். போக்குவரத்து செலவு, உற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோருக்கு கைமாறும் போது, காய்கறி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களின் சில்லரை விற்பனை விலை கணிசமாக உயர்கிறது.
டீசல் விலை உயர்வு பொதுப்போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்களின் இயக்க செலவை பாதிக்கிறது. இதனால் பேருந்து கட்டணங்கள் மற்றும் ஆட்டோ, டாக்சி வாடகைகளும் உயர வாய்ப்புகள் உருவாகின்றன. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் மற்றும் மோட்டார் பம்ப் செட்டுகளுக்கான டீசல் செலவு அதிகரிப்பதால், விவசாய உற்பத்தி செலவுகள் உயர்கின்றன. இது கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆன்லைன் உணவு மற்றும் பார்சல் டெலிவரி சேவைகளில் கூடுதல் கட்டணங்கள் மற்றும் சேவை வரிகள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
டீசல் மற்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1 உயர்ந்தால், ஒரு நடுத்தர குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் மறைமுகமாக ரூ300 முதல் ரூ500 வரை கூடுதல் சுமை ஏற்படும். எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ7 வரை அதிரடியாக உயரும்போது, மாதத்துக்கு ரூ.2,500ல் இருந்து ரூ.3,500 வரை ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கூடுதல் செலவாகிறது.
கடந்த 2008ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 147 அமெரிக்க டாலர் வரை உச்சத்தை தொட்டது. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தபோதிலும், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை அப்போதைய அரசு முழுமையாக உயர்த்தவில்லை. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை அரசே ஏற்றுக்கொண்டு மானியங்களை வழங்கியது.
அப்போது பெட்ரோல் லிட்டர் சுமார் ரூ.65 முதல் ரூ.70 வரை மட்டுமே விற்கப்பட்டது மக்களுக்கு மறந்துவிடவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது, ஒன்றிய அரசுக்கு எதிராக மக்களிடம் தானாக உருவாகும் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாது. அதற்குள் ஒன்றிய அரசு விழித்து கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.


