Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அமைதியான தேர்தல்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. கொளுத்தும் வெயிலால் காலை 7 மணிக்கே பெரும்பாலானோர் வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். 85 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலின்போது 6.29 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு பின், கடந்த மார்ச் மாத நிலவரப்படி தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.73 கோடி. இதில் ஆண் வாக்காளர்கள் 2.80 கோடி, பெண் வாக்காளர்கள் 2.93 கோடி. மூன்றாம் பாலினத்தவர் 7,671. முதல்கட்டமாக எஸ்ஐஆர் மூலம் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். பின்னர் பெயர் சேர்க்க, நீக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இதில் 14.59 லட்சம் பேர் புதிய வாக்காளர்களாக இணைந்துள்ளனர்.

எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்ததால், இம்முறை வாக்கு சதவீதம் குறையுமா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் இருந்தது. இருப்பினும், 85 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. அதேநேரம் எஸ்ஐஆரால் வாக்கு சதவீதம் உயர்ந்தது போல காட்டப்பட்டுள்ளதாகவும் கருத்துகள், புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2021 சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 4.58 கோடி. 2026 தேர்தலில் இந்த எண்ணிக்கை 4.88 கோடியாக உயர்ந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் வாக்குகள் உயர்ந்ததாக தெரிந்தாலும், 2021 தேர்தலில் இருந்து மொத்த வாக்காளர்களில் இறந்தவர்கள், இரட்டைப்பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் நீக்கப்பட்டவர்கள் அடிப்படையில் பார்த்தால் சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறுவது புள்ளிவிபரப்படி தவறு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

உதாரணத்திற்கு, கடந்த தேர்தலில் 100 வாக்காளர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இதில் 60 பேர் வாக்களித்திருந்தால், அது 60 சதவீதமாக மட்டுமே கணக்கெடுக்கப்பட்டிருக்கும். எஞ்சிய 40 சதவீதத்தில், 20 சதவீதம் பேர் வாக்களித்திருக்க மாட்டார்கள். 20 சதவீதம் பேர் இறந்த வாக்காளர்கள், இரட்டைப்பதிவு உள்ளிட்டோரும் இருந்திருப்பார்கள். அதேநேரம் எஸ்ஐஆர் பணிக்கு பின்பு 100 வாக்காளர்களில் 80 பேர் வாக்களித்திருப்பார்கள். அப்போது 80 சதவீதமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 20 சதவீதத்தினர் வாக்குரிமை இருந்தும், வாக்குப்பதிவு செய்யாதவர்களாக இருப்பார்கள். எஸ்ஐஆர் முன், பின் இந்த வித்தியாசத்தை உணர்ந்தால், வாக்கு சதவீதத்தில் பெரியளவில் வித்தியாசம் இருக்காது. பெயர் நீக்க அடிப்படையில்தான் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதை என்பதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

எது எப்படியாக இருந்தாலும், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதுவே தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்பதை அனைவருக்கும் நிரூபித்திருக்கும். அதேநேரம் தமிழகத்தோடு மேற்குவங்க மாநில சட்டமன்றத்திற்கும் முதல்கட்ட தேர்தல் 152 தொகுதிகளில் நடந்தது. இங்கு 92 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து ஆச்சரியத்தை தந்தாலும், ஆங்காங்கே வன்முறை நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மே 4ம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அந்த தினத்துக்காக, 8 நாட்கள் காத்திருப்போம்.