Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமைதியே இலக்கு

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சித்தம் போக்கு சிவன் போக்கு என்கிற ரீதியில் அவர் மேற்கொள்ளும் தடாலடி நடவடிக்கைகள், இந்திய பிரதமர் மோடியை மிஞ்சுகிற அளவில் உள்ளது. அமெரிக்காவின் நாட்டாமைத்தனத்தை நிரூபிக்கிறேன் என கூறிக்கொண்டு, கடந்த பிப்ரவரி 28ம் தேதி டிரம்ப், இஸ்ரேலை துணைக்கு அழைத்து கொண்டு, ஈரான் மீது தாக்குதல் நடத்தினார்.

ஈரானில் ஆட்சி மாற்றம் மற்றும் அவர்களது அணு எரிபொருளை முழுமையாக அழிப்போம் என சூளுரைத்து கொண்டு, அமெரிக்கா நடத்திய தாக்குதலால், உலக நாடுகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தியதால், போர் மேகங்கள் சூழ்ந்தன. இப்போர் காரணமாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானில் பண மதிப்பிழப்பு ஏற்பட்டு வருகிறது. வரலாறு காணாத அளவில் அமெரிக்காவின் டாலர் மதிப்பு சரிந்து வருகிறது. இப்போருக்காக அமெரிக்கா தினமும் பல கோடிகளை செலவழித்து வருகிறது.

அமெரிக்காவின் அடாவடியால் ஆத்திரமடைந்த ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் எரிவாயு, பெட்ரோல், டீசல் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனால் உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைய துவங்கியுள்ளது. பல நாடுகளின் பங்குவர்த்தனை சரிவை நோக்கி செல்கிறது. உலக அளவில் எரிவாயு விலை 35 சதவீதம் உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியாவில் நடக்கும் போரால் அனைத்து கண்டங்களிலும் உள்ள நாடுகள் பாதிப்பை சந்தித்துள்ளன.

இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்துள்ளார். ஈரான் எங்கள் சொல்பேச்சை கேட்கவில்லை என்றால், அங்குள்ள மின்நிலையங்களை தகர்ப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானில் ஒரே வணிக மின் நிலையமான புஷெர் அணுமின் நிலையத்தை அமெரிக்கா குறி வைப்பதாக பலரும் கருதுகின்றனர். திருடனை தேள் கொட்டிய கதையாய் போரை தொடங்கிய அமெரிக்கா, அதை எப்படி முடிப்பது என தெரியாமல் இப்போது திண்டாடிக் கொண்டிருக்கிறது.

டிரம்ப்பின் பேராசையால் நிகழும் பொருளாதார வீழ்ச்சியால் அமெரிக்க ஊடகங்களும், பொதுமக்களும் அவரை வசைபாடி வருகின்றனர். உலக நாடுகளும் டிரம்ப்பை கரித்துக் கொட்டுகின்றன. இலக்கை எட்டிவிட்டோம் என வெற்று சவடால்களை விடும் டிரம்ப், தொடர்ந்து போரை தொடரவே முயற்சி மேற்கொள்கிறார். இதனால் உலக நாடுகளுக்கு வரும் பாதிப்புகளை அவர் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை.

இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் பேசிய இந்திய பிரதமர் மோடி ஈரானில் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதேநேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். கடல் வழி பயணச் சுதந்திரத்தை பாதுகாப்பதும், கப்பல் போக்குவரத்துப் பாதைகள் தொடர்ந்து திறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா மட்டுமின்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 22 நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க கேட்டுக் கொண்டு வருகின்றன. ஈரானின் இந்த நடவடிக்கை, உலகின் அனைத்து பகுதி மக்களை பாதிப்பதாக உள்ளது. யார் பெரியவர் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இதுவல்ல. உலக நாடுகளின் அமைதியே முக்கியம் என்பதை அமெரிக்காவும், ஈரானும் உணர்ந்து கொண்டாலே போர் முடிவுக்கு வந்துவிடும்.