ஆயிரம் ஆயிரம் வருடம் வரலாறுகள் கொண்டது மருத்துவத்துறை. எத்தனையோ நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருப்பினும், இன்னமும் முழுமை அடையாத மருத்துவம் என்றால் அது பெண்களுக்குத்தான். காரணம் பொதுவாகவே பெண்கள் அந்தரங்கம் வெளிப் படுத்துவதில் தயக்கம், அந்தரங்க உறுப்புகள் மீதான சந்தேகங்கள், ஆரோக்கியத்தில் அக்கறை குறைவு, உள்ளிட்ட காரணங்
களால் அவர்களுக்கு இருக்கும் அத்தனை மருத்துவ வசதிகளும் ஆண்களின் உடலமைப்பை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டதாக இருக்கிறது.
ஏன் பெண்களுக்கு பிரத்தியேகமாக இருக்கும் மகப்பேறு மருத்துவத்தில் கூட இன்னமும் வளர்ச்சி தட்டுப்பாடு இருப்பதும் ஆச்சரியம்தான். அப்படித்தான் பெண்களின் மாதவிடாய் மற்றும் கருப்பை சார்ந்த பிரச்னைகளுக்கு பொதுவாக PCOS என்ன குறிப்பிட்டு வந்த நிலையில் இதனை PMOS என குறிப்பிடத் துவங்கியிருக்கிறது மருத்துவ உலகம். ஏன் இந்த திடீர் பெயர் மாற்றம்? PCOS மற்றும் PMOS வித்யாசம் என்ன, இதன் காரணம் மற்றும் பிரச்னைகள் உள்ளிட்டவைக் குறித்து விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் டாக்டர் மதுமதி (Obstetrics and Gynecology, Advanced Laparoscopy and Hysteroscopy) மருத்துவ உலகில் ‘பிசிஓஎஸ்’ (PCOS) என்ற வார்த்தையை ‘பிஎம்ஓஎஸ்’ (PMOS) என்று மாற்றிப் பயன்படுத்துவதற்கான காரணம் என்ன?
பிசிஓஎஸ் (PCOS) என்றால் கருப்பை கட்டிகள் ( Polycystic Ovary Syndrome) என்று பொருள். இந்த பெயர், கருப்பையை (Ovary) மட்டுமே சார்ந்தது. ஆனால் உண்மையில், இது கருப்பை பிரச்னை மட்டுமே அல்ல; இது ஒரு ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்றம் சார்ந்த ஒட்டுமொத்த உடல் கோளாறு. அதனால்தான் இதை பாலி என்டோ கிரைன் மெட்டபாலிக் ஓவரியன் சின்ட்ரோம் ( Poly Endocrine Metabolic Ovarian Syndrome- (PMOS) எனக் குறிப்பிடுகிறோம். கருப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றுவது இந்த ஒட்டுமொத்தப் பிரச்னையின் ஒரு பகுதி மட்டுமே. இந்த பிஎம்ஓஎஸ் (PMOS) பாதிப்பு ஒருவருக்கு இருக்கிறது என்பதை என்னென்ன அறிகுறிகளை வைத்து அறிந்துகொள்ளலாம்?
இதில் பல முக்கிய அறிகுறிகள் உள்ளன
ஒழுங்கற்ற மாதவிடாய்: மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போவது அல்லது தள்ளி வருவது இதன் முதல் அறிகுறி. அதிகப்படியான முகப்பருக்கள் (Acne): ஆண் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதால் முகத்தில் அதிக ரோமங்கள் சில பெண்களுக்கு இருக்கும். தேவையற்ற முடி வளர்ச்சி, முகம், மார்பு போன்ற பகுதிகளில் ஆண்களைப் போல முடி வளரும். இந்த அறிகுறிகள் இருக்கும் எல்லோருக்குமே கருப்பைக் கட்டிகள் இருக்கும் என சொல்ல முடியாது.
இந்த பிஎம்ஓஎஸ் பிரச்னை வருவதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன?
இதற்கென்று துல்லியமான ஒரு காரணம் இன்னும் மருத்துவர் ஆய்வு முடிவாக நிரூபிக்கப்படவில்லை. எனினும், நீரிழிவு அல்லது தைராய்டு போல இதுவும் மரபணு ரீதியாக (Genetics) வர வாய்ப்புள்ளது. இதுதவிர, உடற்பயிற்சியின்மை மற்றும் உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும். வளர்சிதை மாற்றக் கோளாறுகளும் (Metabolic Disturbances), இதற்கு முக்கியக் காரணங்களாக இருக்கும்
எதிர்காலத்தில் இந்த பிரச்னை வரக்கூடாது என்றால், முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்?
பரம்பரை பிரச்னைக்கு முறையான மருத்துவ சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. ஒருவேளை இது பரம்பரை பிரச்னை இல்லை என்றால் வாழ்க்கைமுறை மாற்றம் (Lifestyle Modification) மூலம் இதனைத் தடுக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் எளிய நடைப்பயிற்சி (Walking) செய்ய வேண்டும். ஒரே நாளில் கடுமையான பயிற்சிகள் செய்வதை விட, தினசரி வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருப்பதே போதும். உணவுக் கட்டுப்பாடு, ஜங்க் உணவுகள் (Junk foods) மற்றும் பிறநாட்டு ஃபாஸ்ட் உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான டயட்டைப் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இளம் வயதிலிருந்தே கடைப்பிடிப்பது அவசியம். மது, புகை, முறையற்ற தூக்கம், உள்ளிட்டவை தடுப்பது நல்லது.
PMOS ஒரு பெண்ணுக்கு இருப்பது ஒருவேளை தெரிந்தால், எந்தக் கட்டத்தில் கண்டிப்பாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?
‘‘பொதுவாகவே மாதவிடாய் சுழற்சி சரியாக வரவில்லை என்றாலே கண்டிப்பாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். பலர் 2, 3 மாதங்கள் மாதவிடாய் வராவிட்டாலும் ‘தானாக சரியாகிவிடும்’ என்று அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள். அப்படித் தள்ளிப்போடும்போது, அது பிற்காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு (Heavy bleeding), இரத்த சோகை (Low hemoglobin) போன்ற தீவிர பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே, மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இதனுடன் ஹார்மோன் பிரச்னைகள், உடலுறவில் நாட்டமின்மை, குழந்தைப் பேறு தாமதம், மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலி மற்றும் அதீத இரத்தப் போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் தீவிரமாக இருப்பின் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
இதற்குச் சிகிச்சையாக சப்ளி மெண்ட்டுகள் (Supplements) அல்லது மருந்துகள் ஏதேனும் இருக்கிறதா?
‘மயோ-இனோசிடால்’ (Myo-inositol) போன்ற சில சப்ளிமெண்ட்டுகள் மற்றும் ஹார்மோன் மாத்திரைகள் தற்காலிகமாக அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால், அவை மட்டுமே முழுமையான தீர்வல்ல. வாழ்க்கைமுறை மாற்றத்தோடு (உணவு + உடற்பயிற்சி) சேர்த்துதான் இந்த சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த 5, 6 ஆண்டுகளுக்குப் பிரச்னை வராமல் தடுக்க முடியும். மேலும் தன் உடலளவில் நடக்கும் மாற்றங்கள், பிரச்னைகள் மேல் பெண்கள் அக்கறை காட்டுவதும் அவசியம்.
எல்லா மாதவிடாய் பிரச்னைகளும் கருப்பைக் கட்டிகளை உருவாக்கும் PCOS அல்ல. கருப்பை கட்டிகள் இல்லாத உடல் பருமன், இரத்தத்தில் கொழுப்பு, இன்சுலின், தைராய்டு சுரப்பிகளில் பிரச்னை, ஹார்மோன் சமநிலையில் இடையூறு என பலவிதமான காரணங்களைக் கொண்ட PMOS ஆகவும் இருக்கலாம் என்பதாலேயே PCOS என ஒரு குறிப்பிட்ட பகுதியாக இல்லாமல் PMOS என முழுமையான பெண்களின் உடல் பிரச்னையாக தற்போது அடையாளப்படுத்தப்படுகிறது. இதனை துவக்கத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மகப்பேறு மட்டுமில்லாமல் மெனோபாஸ் சமயத்திலும் கூட எவ்வித கஷ்டமும் இல்லாமல் பெண்கள் கடந்து போகலாம்.
- ஷாலினி நியூட்டன்


