எங்களை தொடர்ந்து விமர்சித்தால் உங்கள் கட்சி காணாமல் போய்விடும்: ஜெகன்மோகனுக்கு பவன்கல்யாண் எச்சரிக்கை
திருமலை: தொடர்ந்து எங்களை விமர்சனம் செய்தால் கட்சியே இல்லாமல் செய்துவிடுவோம் என ஜெகன்மோகனுக்கு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் நேற்று ெதாடங்கியது. ஏலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் ஜெகநாதபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் அங்கு நடந்த யாகத்தில் பங்கேற்றார். தொடர்ந்து இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பங்கேற்று பயனாளிகளுக்கு சிலிண்டர் வழங்கினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில், அவரது தங்கையும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் ஷர்மிளா, தனது உயிருக்கு ஆபத்து எனக்கூறினார். அவருக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், தற்போது நடக்கும் எங்கள் ஆட்சியில் நாங்கள் நிச்சயமாக பாதுகாப்பு தருவோம். நீங்கள் கட்சி தலைவராக இருப்பதால் எங்களை விமர்சனம் செய்தாலும் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை எங்கள் பொறுப்பாக நாங்கள் நினைக்கிறோம்.
சமூக வலைதளங்களில் என்னையும், என் குடும்பத்தையும் விமர்சனம் செய்தால் நாங்கள் சோர்ந்து விடுவோம் என நினைக்காதீர்கள். ஏற்கனவே மக்கள் உங்களுக்கு (ஜெகன்மோகன்) சரியான பாடத்தை கற்பித்துள்ளனர். மேலும், தொடர்ந்து எங்களை விமர்சனம் செய்தால் கட்சியே இல்லாமல் செய்துவிடுவோம்’ என எச்சரிக்கை விடுத்தார்.