பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு: மின்சார ரயில் இஞ்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி!
பட்டுக்கோட்டை: திருச்சி ரயில்வே கோட்டத்தின் கடைசி டீசல் வழித்தடமான பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில் மின்மயமாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முற்றிலும் முடிவடைந்து மின்சார ரயில் இஞ்ஜின் கொண்டு நேற்று இரவு சோதனை ஓட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் பிரமிளா தலைமையில், அதிகாரிகள் கலந்து கொண்டு முதலில் ரயில் இஞ்ஜினுக்கு மலர்கள் வைத்து, தேங்காய் உடைத்து, ஊதுபத்தி காட்டி, சூடம் ஏற்றி முறைப்படி வழிபாடு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் அதன் தலைவர் ஜெயராமன், செயலாளர் கலியபெருமாள், நிர்வாகக்குழு உறுப்பினர் தைனீஸ்ராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீதர், துணைத்தலைவர் லெட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் ரயில்வே அதிகாரிகளுக்கு சந்தன மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரயில் புறப்படும்போது ஒலிக்கும் வழக்கமான ரயில் சத்தத்துடன் மின்சார ரயில் இஞ்ஜின் புறப்பட்டது. அப்போது ரயில் பயணிகள் சங்கத்தினர் டாட்டா காட்டி ரயில் இஞ்ஜினை வழியனுப்பி வைத்தனர். பின்னர் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் இஞ்ஜின் புறப்பட்டு பேராவூரணி, அறந்தாங்கி வழியாக காரைக்குடி ரயில் நிலையத்தை சுமார் 50 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்திற்குள் அடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் மின்சார ரயில் இஞ்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.




