சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பட்டினப்பாக்கம், முல்லிக்குப்பம், சீனிவாசபுரம், நம்பிக்கை நகர் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தலைமைச் செயலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் முல்லிக்குப்பம் மீனவர் கிராமத்திற்கு சொந்தமானது என்றும், மூன்று, நான்கு தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
“எங்களை இடம்பெயரச் சொன்னால் எங்கு சென்று வாழ்வது? கடலை நம்பியே எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் இங்கு தலைமைச் செயலகம் கட்ட அனுமதிக்க மாட்டோம்” என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மக்களிடம் ஆலோசிக்காமல் அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு தற்போது அமைச்சர் பொறுப்பில் இருந்து நழுவுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பட்டா நிலத்தை அரசு கையகப்படுத்துவது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ள மீனவர்கள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செப்டம்பர் 15ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

