Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பயணிகளின் இன்னல்களை தீர்க்கும் வகையில் சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர், லிப்ட்களை விரைந்து நிறுவ வேண்டும்: தயாநிதி மாறன் எம்.பி, ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம்

சென்னை: பயணிகளின் இன்னல்களை தீர்க்க, சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட்களை விரைந்து நிறுவ வேண்டும் என்று மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடித விவரம்: சென்னையின் பல ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட்கள் இல்லாதது மற்றும் சில நிலையங்களில் உள்ளவை பராமரிப்பின் மோசமான நிலையில் இருப்பது குறித்து, பலமுறை அதிகாரப்பூர்வ கடிதங்கள் மூலமும், சென்னை பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான தெற்கு ரயில்வே கூட்டங்களிலும் தொடர்ந்து எழுப்பி வருகிறேன்.மிக முக்கியமான நிலையங்களில் ஒன்றாக இருந்தும், சென்னை கோட்டை ரயில் நிலையம் பயணிகளுக்கான தினசரி வசதிகளில் அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த நிலையத்தை ஆயிரக்கணக்கான தினசரி பயணிகளுக்கு, குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

எழும்பூர் மற்றும் கடற்கரை இடையே 4வது தண்டவாளம் அமைக்கப்பட்ட போது தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் எழுத்துப்பூர்வ கோரிக்கை உட்பட பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்ட பின்னரும், கோட்டை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட்கள் நிறுவப்படவில்லை என்பது அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. சென்னை கோட்டை ரயில் நிலையம் பின்வருவோருக்கு முதன்மையான போக்குவரத்து மையமாக உள்ளது. தமிழ்நாடு தலைமைச் செயலகம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள், தலைமைச் செயலக ராணுவ கேன்டீனுக்கு அடிக்கடி வரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பாரிமுனை செல்லும் கடைக்காரர்கள் மற்றும் இத்தகைய முக்கியமான போக்குவரத்து மையத்தில் அடிப்படை அணுகல் வசதிகள் இல்லாதது ஏற்க முடியாதது.

எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட்கள் இல்லாதது வெறும் அசௌகரியம் மட்டுமல்ல, இது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு தடையாக உள்ளது. இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். எனவே சென்னை கோட்டை நிலையத்தின் அனைத்து நடை மேடைகளிலும் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட்கள் அனுமதித்து, நிறுவுதலை விரைவுபடுத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடு மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட திட்டமிட்ட செயல் திட்டத்தை வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.