கடந்த மார்ச் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை அதிகரித்துள்ளது, நிறுவனங்கள் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்தந்த நிறுவனங்கள் டீலர்களுக்கு விற்பனை செய்த மொத்த விற்பனை அடிப்படையில் இவற்றை வெளியிட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாக மாருதி சுசூகி நிறுவனம் கடந்த மாதத்தில் 1,69,428 கார்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 10.27 சதவீத உயர்வாகும்.
இதற்கு அடுத்ததாக, டாடா நிறுவனம் 66,971 கார்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 29 சதவீதம் அதிகம். இதுபோல், மகிந்திரா நிறுவன கார்கள் விற்பனை 25 சதவீதம் உயர்ந்து 60,272 ஆக உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 55,064 கார்களை விற்றுள்ளதாக கூறியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.3 சதவீத உயர்வாகும்.
டொயோட்டா நிறுவனம் கடந்த மாதம் 35,125 கார்களை விற்பனை செய்துள்ளது. இத கடந்த ஆண்டு மார்ச்சை விட 23.8 சதவீதம் அதிகம். கியா மோட்டார் நிறுவனம் 29,112 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 14.5 சதவீத உயர்வாகும்.
இதுபோல், ஸ்கோடா நிறுவன கார்கள் விற்பனை 6.8 சதவீதம் உயர்ந்து 7,906 ஆகவும், ஹோண்டா நிறுவன கார்கள் விற்பனை 5 சதவீதம் அதிகரித்து 7,585 ஆகவும், ஜெஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் கார்கள் விற்பனை 19 சதவீதம் அதிகரித்து 6,528 ஆகிவும், ரெனால்ட் விற்பனை 77 சதவீதம் உயர்ந்து 5,046 ஆகவும், நிசான் நிறுவனத்தின் கார்கள் விற்பனை 151 சதவீதம் உயர்ந்து 4,408 ஆகவும் உள்ளது.
மாருதி நிறுவன கார்கள் விற்பனையில் பலேனோ, ஸ்விப்ட் டிசையர், வேகன் ஆர் மற்றும் செலரியோ ஆகியவை மொத்தம் 71,789 கார்கள் விற்பனையாகியுள்ளன. எஸ்யுவியை பொறுத்தவரை பிரஸ்சா, கிராண்ட் விட்டாரா, பிரான்க்ஸ், இ-விட்டாரா ஆகியவை மொத்தம் 71,356 கார்கள் விற்பனையாகியுள்ளன.
டாடா மோட்டார்சை பொறுத்தவரை நெக்சான், பஞ்ச் ஆகியவை விற்பனை உயர்வக்கு முக்கியமாக பங்களித்துள்ளன. மகிந்திரா நிறவனத்தை பொறுத்தவரை ஸ்கார்பியோ என், தார் மற்றும் தார் ரோக்ஸ் ஆகியவை அதிகமாக விற்பனையாகியுள்ளன.
இதுபோல், ஹூண்டாய் நிறுவனத்துக்கு கிரெட்டா, வெனு, ஐ20 ஆகியவையும், டொயோட்டாவுக்கு இன்னோவா ஹைகிராஸ், அர்பன் குரூசர் ஹைரைடர், பார்ச்சூனர் ஆகியவையும், கியாவில் செல்டாஸ், சோனட் ஆகியவையும், ஸ்கோடாவுக்கு கைலாக், ஹோண்டாவுக்கு சிட்டி, அமேஸ், எலவேட் ஆகியவையும் விற்பனை உயர்வுக்கு கைகொடுத்துள்ளன என நிறுவன புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
