Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கட்சி தலைமை டெல்லிக்கு அவசர அழைப்பு புதுச்சேரி பாஜ தலைவராக சபாநாயகர் செல்வம் தேர்வு? மாநில பொறுப்பாளருடன் சந்திப்பு

புதுச்சேரி: டெல்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கட்சியின் மாநில பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான மான்சுக் எல்.மண்டாவியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். விரைவில் செல்வம் பாஜ தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. புதுச்சேரியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியை தழுவினார். ஆளுங்கட்சி கூட்டணி வேட்பாளர் தோல்வி அடைந்தது பாஜவுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

இதையடுத்து தற்போதைய பாஜ மாநில தலைவரான செல்வகணபதி மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகின. இதற்கிடையே நாடு முழுவதும் பாஜவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு மாநில அளவில் புதிய தலைவர்கள், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் தமிழகத்தில் அதிமுகவுடன் இணக்கமாக உள்ள நயினார் நாகேந்திரனுக்கு பாஜ தலைவர் பதவியை சமீபத்தில் டெல்லி தலைமை வழங்கியதோடு அதிமுகவுடன் கூட்டணியையும் உறுதிபடுத்தி உள்ளது. அதிமுகவுடன் மோதல் போக்கை கையாண்டு வந்த அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.

அதேபோல் புதுச்சேரியிலும் பாஜ தலைவர் மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றன. பாஜ மாநில தலைவராக தற்போதைய சபாநாயகராக உள்ள ஏம்பலம் செல்வம் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரத்தில் பரவலாக பேச்சுகள் அடிபட்டன. இந்நிலையில் கட்சி தலைமையின் அவசர அழைப்புக்கிணங்க சபாநாயகர் செல்வம் நேற்று டெல்லி விரைந்தார். டெல்லியில் முகாமிட்டுள்ள செல்வம், தொழிலாளர் நலம், வேலைவாய்ப்பு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், புதுச்சேரி மாநில பாஜ சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான மான்சுக் எல்.மண்டாவியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது மாநில பாஜ புதிய தலைவர் விவகாரம், வரவுள்ள பொதுத்தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து அவர் மேலும் சில ஒன்றிய அமைச்சர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியை செல்வம் சந்தித்து விட்டு திரும்பியிருந்த நிலையில் மீண்டும் டெல்லி விரைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விரைவில் புதுச்சேரி பாஜ புதிய தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படும் சபாநாயகர் செல்வம், ரங்கசாமியுடன் இணக்கமாக செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.