புதிதா கட்சிக்கு வந்தவங்களுக்கு சீட் கொடுக்க கூடாதுன்னு இலைக்கட்சியில் போர்க்கொடி தூக்குவது பற்றி சொல்கிறார் wiki யானந்தா
‘இலைக்கட்சி மாஜி அமைச்சர் ஒருத்தர் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதை அறிந்து அவரது எதிர்தரப்பினர் வறுத்தெடுக்காங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் மணியானவர், இலை கட்சியில் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து வந்துள்ளாராம்.. கடந்த ஆட்சியின் போது சேலத்துக்காரர் முதல்வர் பொறுப்புக்கு வந்த போது, மணியானவரோ திடீரென துணை முதல்வர் பதவிக்கு வர ஆசைபட்டு காய் நகர்த்தி இருக்காரு..
ஆனால், சில காரணங்களால் அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லையாம்.. 2026 தேர்தலில் இலை கட்சியில் முதல்வர் வேட்பாளராக சேலத்துக்காரர் முடிவு செய்யப்பட்டு இருக்காரு.. யாரு யாருடன் கூட்டணி என முதலில் முடிவாகல.. அடுத்து துணை முதல்வர் பதவி, கூட்டணி கட்சிக்கா என முடிவு எடுக்க வேண்டும். இலை கட்சி ஆட்சிக்கு வரணும்.. அதன் பின்னர் தான் துணை முதல்வர் பற்றி யோசிக்க வேண்டும்.. தேர்தல் தேதி அறிவிக்க வில்லை..
அதற்குள் துணை முதல்வர் பதவிக்கு மாஜி அமைச்சர் ஆசைப்படுகிறாரே என மணியானவரின் எதிர்தரப்பை சேர்ந்த நிர்வாகிகள் வறுத்தெடுக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘திடீரென இலைக்கட்சி கூட்டணியில் சேர்ந்த அன்பானவர் குறிவைத்து கேட்கும் தொகுதியால் அதிமுகவினர் அதிர்ச்சியில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘எடப்பாடி கட்சியில் அன்பானவர் திடீரென கூட்டணி சேர்ந்து மாம்பழம் கட்சியில் தந்தைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இப்ப குறிச்சி மாவட்டத்தில ஏற்கனவே போட்டியிட்டு தோத்துபோன சங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து, அன்பானவர் எடப்பாடியிடம் கேட்டு நச்சரித்து வருகிறாராம்.. அதேபோல கல்விக்கு அதிபதியான முல்லைக்கு தேர் கொடுத்த மன்னரும் சங்கை தொகுதியை கேட்டு வருகிறாராம்.. ஏற்கனவே அதிமுகவுல அம்மா ஆட்சியில பலம் வாய்ந்த முன்னாள் அமைச்சர் தனக்கு சீட் கொடுத்தே ஆக வேண்டும் என்று தலைமையிடம் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறாராம்..
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே வேட்பாளராக அறிவித்து பின் மாற்றப்பட்ட சேர்மனாக இருந்த ராஜாவானவரும் சீட் கேட்டு தலைமையை நச்சரித்து வருகிறாராம்.. இப்படியிருக்க மாம்பழம் கட்சிக்கு எப்படி சீட் ஒதுக்குவாங்க? இலைக்கட்சியில விடுவாங்களா என்பது போக போகத்தான் தெரியும்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘துறையின் தலைவராக இருந்து கீழ்நிலை ஊழியர்களிடம் முரண்டு பிடிக்கும் பெண் மருத்துவருக்கு எதிராக போராட்டம் நடத்தப் போறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் மைக்ரோ பயாலஜி துறையில் நான்கு எழுத்து அம்மன் பெயர் கொண்ட ஒரு பெண் மருத்துவர் பணிபுரிகிறார்.. இவர் துறையின் தலைவராக இருக்கிறாராம்.. தனக்கு கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் அனைவரையும் தரக்குறைவாக பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளாராம்.. இவரிடம் வேலை செய்ய முடியாமல் கான்டிராக்ட் முறையில் பணிபுரிந்து வந்த 5 பேர் பணியை விட்டுவிட்டே போயிட்டாங்களாம்..
அதேபோல், பெண் மருத்துவர் ஒருவர் உயர் படிப்பை படித்து வந்தாராம்.. இவர் மகப்பேறு விடுமுறையில் சென்றுள்ளாராம்.. பின்னர், தேர்வு எழுதுவதற்காக, விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து வாங்க சென்றுள்ளார். அப்போது அவர், ‘என்னால் கையெழுத்து போட முடியாது, நீ கர்ப்பம் ஆனதற்கு நான் என்ன செய்வது?’ என மனம் நோகும்படி பேசி அவமானப்படுத்தி அனுப்பி விட்டாராம்..
இதுபோல், யார் கையெழுத்து கேட்டு, ஆவணங்களை கொடுத்தாலும், அதை திருப்பி கையில் கொடுக்காமல், கீழே போட்டுவிட்டு, எடுத்து செல்லும்படி திமிராக கூறுகிறாராம்.. இதுபோன்ற நடவடிக்கைகளால் நொந்து போயிருக்கும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட உயர்அதிகாரிக்கு எதிராக போராட்டம் நடத்த ஆயத்தம் ஆகி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இடைத்தரகர்களின் இடையூறால் கொந்தளிப்பில் இருக்காங்களாமே கரும்பு உழவர்கள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடல்ஊர் பெயர் கொண்ட மாவட்டத்தில் தோப்பு பகுதி உள்ளதாம்.. விவசாய பகுதியான இங்கு பொங்கல் சீசன் களைகட்டுமாம்.. தித்திக்கும் பன்னீர் கரும்பின் விளைச்சல்தான் இதற்கு காரணமாம்.. அரசின் உத்தரவுக்கிணங்க தங்களது கரும்புகளை நிர்ணயித்த தொகைக்கே அதிகாரிகள் கொள்முதல் செய்வார்கள் என வழிமேல் விழி வைத்து காத்திருந்தார்களாம்.. ஆனால் இடைத்தரகர்களின் இடையூறால் கொள்முதல் திசைமாறியதாம்..
சரியான விளைச்சல் இல்லாத தரம் குறைந்த கரும்புகளை சில முக்கிய புள்ளிகளிடம் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாம்.. இதனால் பெரும்பாலான கரும்புகள் வயலிலே தேங்கிட உள்ளூர் விவசாயிகளோ முணுமுணுப்பில் உள்ளார்களாம்.. எட்டடி தித்திக்கும் கரும்பாக இருப்பதால் மனம் தளராத உழவர்களோ வெளி மாநிலத்துக்கு அனுப்ப முடிவெடுத்து கரும்புகளை வெட்டும் பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்களாம்..
ஆனால் சிலரோ விற்பனை ஆகாத கரும்புகளை வயலில் அழித்துவிட வேண்டியதுதான் என தங்களது மனக்குமுறலை கொட்டி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதிதாக கட்சிக்கு வந்தவர்களுக்கு சீட் கொடுக்க கூடாது என போர்க்கொடி தூக்கியிருக்கியிருக்காங்களாமே சீனியர் நிர்வாகிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சி மாஜி அமைச்சரின் மணியானவரின் ஆதரவாளர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் நிற்பதற்காக பணிகளை தொடங்கியிருக்கும் நேரத்தில் அவர்களுக்குள் இடையே திடீரென கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதாம்.. இதற்கிடையில் புதிதாக கட்சிக்கு வந்தவர்களுக்கு எல்லாம் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க கூடாது என சீனியர் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியிருக்காங்களாம்...
இந்த தகவல் தெரிய வந்த மணியானவர், என்ன செய்வதென்று தெரியாமல் அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் புலம்பி இருக்காரு.. முக்கியமாக, கடலோர மாவட்டத்தில் கோஷ்டி பூசலை சமாளிக்க முடியாமல் மணியானவர் திணறி வருவதாக நிர்வாகிகளுக்குள் அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


