Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கட்சியில் அதிகார பகிர்வு வழங்காவிட்டால் கூண்டோடு விலகுவோம் சீமானுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் போர்க்கொடி

* ஒவ்வொரு முறையும் நிதி கேட்கும்போதும் பல கோடி தந்தோம் என பரபரப்பு புகார்

திருச்சி: கட்சியில் அதிகார பகிர்வு வழங்காவிட்டால் கூண்டோடு விலகுவோம் என்று சீமானுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் நாம் தமிழர் கட்சி மண்டல பொறுப்பாளர் பிரபு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2006ம் ஆண்டு முதல் இலங்கையில் நடந்த போரில் 2 லட்சம் தமிழ் உறவுகள் படுகொலை செய்யப்பட்ட நாள் முதல் இலங்கையில் போர் முடியும் வரை தொடர்ந்து பலகட்ட போராட்டங்கள், எதிர்ப்புகள், வழக்குகளை சந்தித்துள்ளோம்.

நாம் தமிழர் கட்சி உருவாவதற்கு தமிழ் தேசியம் பேசக்கூடிய அனைத்து ஆர்வலர்களும் உறுதுணையாக இருந்துள்ளோம். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வரை தன்னிச்சையாக செயல்படுவதோடு அதிகார பகிர்வை கட்சியில் உள்ள யாருக்கும் கொடுக்காமல் அனைத்து பொறுப்புகளுமே தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு செயல்பட்டு வருகிறார். கட்சிக்காக குடும்பத்தை இழந்து, பொருளாதாரத்தை இழந்து பல்வேறு வழக்குகளை சந்தித்து வருவதோடு கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீதிகளிலும் இன்று நாம் தமிழர் கட்சி கொடி பறப்பதற்கு காரணமாக இருந்த யாரையும் தன் பக்கத்தில் வைத்து கொள்ள சீமான் தயாராக இல்லை.

கட்சிக்காக அவர் ஒவ்வொரு முறை நிதி கேட்கும்போதும் பல கோடிக்கு மேல் எங்களது பணத்தை அள்ளி வழங்கியுள்ளோம். இலங்கையில் பொருளாதார ரீதியாக தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது கட்சி சார்பில் 1,000 டன் உணவு பொருட்கள், பல கோடி பணங்களும் தமிழகத்தில் இருக்கக்கூடிய சொந்தங்களால் வழங்கப்பட்டது. இறுதியில் அந்த உணவு பண்டங்களும், பணமும் இலங்கை தமிழர்களுக்கு சென்றடையவில்லை. கட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய தொண்டர்கள், நிர்வாகிகள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலோடு அவர்கள் எதற்காக நீக்கப்பட்டனர் என்ற பட்டியலையும் சேர்த்து ஒரு வெள்ளை அறிக்கையாக சீமான் வழங்க வேண்டும். விஜயலட்சுமி என்ற நடிகையின் புகாரின் அடிப்படையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்தும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் ரூ.50 ஆயிரம் வழங்கியது குறித்தும் விரிவான அறிக்கையை பொதுமக்கள் முன்னிலையில் தெளிவுப்படுத்த வேண்டும். கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் அதிகார பகிர்வை பிரித்து வழங்கி கட்சியை வளர்ப்பதற்கான முயற்சியில் சீமான் ஈடுபட வேண்டும்.

கட்சியில் இருந்து பலர் வெளியேறுவதற்கு தயாராகி வரும் நிலையில் சீமான் விரைந்து ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ஸ்ரீரங்கம்- மணப்பாறை மாவட்ட செயலாளர் பேரா.முருகேசன், துறையூர்- முசிறி மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் மைக்கேல் ஆரோக்கியராஜ், மாவட்ட வீரத்தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் குப்புசாமி, தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் ஜாபர்,

பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் தேவராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை இணை செயலாளர் சைமன், லால்குடி தொகுதி துணை செயலாளர் லோகநாதன், திருச்சி தெற்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் அருணாச்சலம், இணை செயலாளர் கிருஷ்ணன், திருச்சி கிழக்கு தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் சரவணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர்.

* விஜயலட்சுமி என்ற நடிகையின் புகாரின் அடிப்படையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்தும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் ரூ.50 ஆயிரம் வழங்கியது குறித்தும் விரிவான அறிக்கையை பொதுமக்கள் முன்னிலையில் தெளிவுப்படுத்த வேண்டும்.

* இலங்கையில் பொருளாதார ரீதியாக தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது கட்சி சார்பில் 1,000 டன் உணவு பொருட்கள், பல கோடி பணங்களும் தமிழகத்தில் இருக்கக்கூடிய சொந்தங்களால் வழங்கப்பட்டது. இறுதியில் அந்த உணவு பண்டங்களும், பணமும் இலங்கை தமிழர்களுக்கு சென்றடையவில்லை.