Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கட்சியில் இருக்கும் சொற்ப ஆட்களும் புதிய காரணம் சொல்லி வெளியேறுவதால் அதிர்ந்து போயிருக்கும் குக்கர்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலத்துக்காரருடன் கூட்டணியில் இருப்பதற்கு அவரது கட்சியிலேயே இருந்திருக்கலாமே என நொந்துபோய் வெளியேறி வர்றாங்களாமே குக்கர் கட்சியினர்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘லிங்கசாமியின் பெயர் ெகாண்ட நதி மாவட்டத்தில் குக்கர் தரப்பு கூடாரம் நாளுக்குநாள் காலியாகிக் கொண்டே இருக்கிறது.. கட்சி துவங்கிய போது பல மாஜிக்கள் குக்கர் தரப்பு பின்னாடி போனாங்க.. நாளடைவில் குக்கர்காரரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் வரிசையாக பலரும் விலக துவங்கினாங்க.. மாவட்ட செயலாளராக மாஜி மீசைக்காரர் இருந்தவரை, கட்சியை பலமாக வைத்திருந்தாராம்..

அவரும் இலைத்தரப்பில் ஐக்கியமானதும் அவருக்கு பதிலாக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட ஊர் பெயரை முன்னால் கொண்டவரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் பலரும் ஒதுங்கிக் ெகாண்டனராம்.. ஒவ்வொரு தொகுதிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்த குக்கர் கட்சியினரில் பெரும் பகுதியினர் பிற கட்சிகளில் போய் சேர்ந்து விட்டாங்க.. விரல்விட்டு எண்ணும் வகையில் இருந்தவர்களோ, ‘சேலத்துகாரருடன் கூட்டணி இல்லை என்பதில் குக்கர்காரர் உறுதியாக இருந்திருக்க வேண்டும். அவருடன் கூட்டணியில் இருப்பதற்கு பேசாமல் நாமெல்லாம் அவரது கட்சியிலேயே இருந்திருக்கலாம்’ எனக் கூறியபடி விலகி வருகிறார்களாம்..

இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலில் இந்த மாவட்டத்து தொகுதி இருந்த நிலையில் கட்சியினரின் விலகல் முடிவு, குக்கர்காரரை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனி மாநகர காக்கி துறையில் நட்சத்திரமாக ஜொலிக்கிறாராமே ஒரு அதிகாரி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகரில் காக்கி அதிகாரிகள் சிலருக்கு நிம்மதியாக வேலை செய்ய முடியலையேங்குற கவலை தலைக்கு மேல இருக்குதாம்.. குறிப்பாக அழகு நிறைந்த ஸ்டேஷனில் திருநங்கைகள் வெள்ளிக்கிழமை பூஜை போட்ட விவகாரம் சூடுபிடித்திருக்காம்..

இங்கு பணியாற்றும் இன்ஸ் ஒருவர், அவர் பணியாற்றிய ஸ்டேஷனில் திருநங்கைகளை வைத்து தான் எப்போதும் பூஜை போடுவாராம்.. அதன்படியேதான் பூஜை போட்டிருக்காரு.. அதற்கான காரணமும் இருப்பதாக உளவுப்பிரிவு ஆபீசர்ஸ் சொல்றாங்க.. சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஸ்பா சென்டரை நடத்தி வந்தாராம்.. அவரிடம் இருந்த நகைக்காக அவருடன் இருந்தவரே மர்டர் பண்ணிட்டு தப்பி ஓடிட்டாராம்.. அதன் பிறகு மாநகரில் ஸ்பா சென்டருக்கு தடை இருந்துச்சாம்.. ஆனால் சத்தமில்லாமல் ஸ்பா மூலம் கொஞ்சோண்டு வருதாம்..

அதில் எந்த பிரச்னையும் வந்திடக் கூடாதுங்குற வேண்டுதலுக்காகத்தான் இந்த பூஜைன்னு சொல்றாங்க.. அப்படியே தாய் ஸ்டேஷன் பக்கத்துல ஒரு அதிகாரி கரன்சியில புகுந்து விளையாடுவதாக சென்னைக்கு புகார் பறந்திருக்கு.. அதுவும் மொட்டை பெட்டிசன் இல்லையாம்.. கடிதத்தை அனுப்பியதாக சிலரது பெயரும் இருந்துச்சாம்.. இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தீவிர விசாரணை நடத்திக்கிட்டு இருக்காராம்.. கரைவேட்டிக்காரங்களும் விசாரணைக்கு ஆஜராகிகிட்டு இருக்காங்களாம்..

ஆனால் உலகமே உருண்டுவிழும் சம்பவமும் இந்த காக்கித்துறையில் நடந்ததுதான் பெரும் ஆச்சரியமா இருக்குதாம்.. மாநகரில் சமீபத்தில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துச்சாம்.. அதில் திறமையாக செயல்பட்டு, ஆசாமிகளை பிடிச்சதோடு, திருட்டு போனவற்றை முற்றிலும் கொண்டு வந்துட்டாங்களாம்.. கொள்ளை போன கடைக்காரர் பெரும் பசை கொண்டவராம்.. அவர் காக்கிகளின் திறமையை பாராட்டி மனமுவந்து சில எல்களை அன்பளிப்பாக வழங்கினாராம்.. இதை பார்த்து ரொம்ப சந்தோசமடைந்தாங்களாம் காக்கிகள்..

ஆனால் இதில் எல்லோருக்கும் பங்கு கிடைக்கலையேங்குற மனக்கவலை பெருசா இருக்குதாம்.. என்றாலும் பங்கு பிரித்ததில் ஒருவருக்கு மட்டும் கால் லட்சம் போனதாம்.. ஆனால் அந்த அதிகாரியோ இந்த துட்டு எனக்கு வேண்டவே வேண்டாமுன்னு நச்சென சொல்லிட்டாராம்.. காக்கித்துறையில் இப்படியும் ஒரு நட்சத்திரமான்னு சக காக்கிக்கள் மூக்கின்மேல் விரலை வச்சிக்கிட்டிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரசு பணி நியமனத்தில் ஏனாமிற்கு மறைமுகமாக அதிகாரிகள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தமிழகத்தை ஒட்டிய யூனியனான புதுச்சேரியில் அரசு பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாம்.. நீதிமன்றம் வரை பிரச்னை சென்றதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்த வரலாறும் இருக்காம்.. நிலைமை இப்படியிருக்க மீண்டும் மீண்டும் நியமனத்தில் மோசடிகள் சகஜமாக திரைமறைவில் அரங்கேறி வருகிறதாம்.. அதிலும் குறிப்பாக புதுச்சேரியுடன் ஒட்டியுள்ள ஆந்திராவின் ஏனாமிற்கு அனைத்திலும் தாராளம் காட்டப்படுகிறதாம்..

இதற்கான மர்மம்தான் என்னவென்று புரியாமல் புதுச்சேரிவாசிகள் புலம்பி வருகிறார்களாம்.. சமீபத்தில் அமைச்சக உதவியாளர் தேர்வு நடந்து முடிந்ததாம்.. இதில் இடபிள்யுஎஸ் பிரிவில் 25 பேர் தேர்வான நிலையில், நள்ளிரவில் ஒட்டப்பட்டிருந்த பட்டியலை பார்த்தால் அதில் 23 பேர் ஏனாமை சேர்ந்தவர்களாம்.. மற்ற 3 பிராந்தியங்களுக்கு சேர்த்து ஒட்டுமொத்தமாக வெறும் 2 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்களாம்..

இதில் தந்திர உள்ளடி குளறுபடிகள் அரங்கேற்றப்பட்டு உள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கின்றனவாம்.. அதாவது இப்பிரிவுக்கு தேவையான ஆவணங்களை வழங்க வேண்டிய அதிகாரிகள், இழுத்தடிப்பு செய்து மறைமுகமாக ஏனாமிற்கு உதவினார்களா என்ற சர்ச்சை எழுந்துள்ளதாம்.. இதுபற்றிதான் தற்போதைக்கு புதுச்சேரி முழுக்க பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.