கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி, கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என உத்தரவு
திண்டிவனம்: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அன்புமணியை பாமகவில் இருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கியுள்ளார். மேலும் அவருடன் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் போட்டி பொதுக்குழு நடத்தினர். அன்புமணி தரப்பில் நடந்த பொதுக்குழுவில் பாமக தலைவராக அன்புமணியே 2026 வரை தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மாதம் 17ம் தேதி ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டது. இதற்கு 31ம் தேதிக்குள் விளக்கம் கேட்டு அன்புமணிக்கு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கடிதம் அனுப்பியது. ஆனால் அன்புமணி பதிலளிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 3ம்தேதி தைலாபுரத்தில் நடந்த மாநில நிர்வாக குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மேலும் ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கலாம் என முடிவெடுத்து செப். 10ம் தேதிக்குள் அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும்,
இல்லாவிட்டால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் கொடுப்பதாக சொன்ன அன்புமணி, எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனிடையே பாமக மற்றும் மாம்பழம் சின்னத்துக்கு அன்புமணி உரிமை கோரி வழக்கு தொடர்ந்தால், என் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட் சிட்டி சிவில் நீதிமன்றங்களில் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை பாயலாம் என தகவல் வெளியாகின.
இந்நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி: பாமகவின் பல்வேறு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு 19-8-25 தேதியில் அனுப்பி வைத்த 16 குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. 2 முறை அவகாசம் கொடுத்தும் பதில் ஏதும் எழுத்துப் பூர்வமாக கொடுக்கவில்லை. அனைத்து குற்றச்சாட்டுகளையும் தான் செய்த தவறு என்று ஒப்புக் கொண்டதற்கான அனுமானம் இருப்பதாலும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவையே என்றும் சரியானவையே என முடிவு செய்யப்படுகிறது.
அதனால் கட்சியின் நற்பெயருக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் அன்புமணியின் செயல்கள் கட்சி ஆரம்பித்தது முதல் இதுநாள் வரை எவரும் செய்யாத ஒரு மிகமோசமான மற்றும் தலைமைக்கு கட்டுப்படாத தான்தோன்றித்தனமான செயல் மட்டுமின்றி ஒரு அரசியல்வாதி என்ற தகுதியற்றவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அதாவது லீடர்ஸ்ஷிப் குவாலிட்டி அவரிடம் சுத்தமாக இல்லை.
ஆதலால் பாமகவின் அனைத்து தரப்பு நிர்வாகிகள், தலைவர்கள், உறுப்பினர்களின் மனம் புண்படும்படியாக நடந்துள்ள இந்த செயல், கட்சியை அழிக்க முயற்சிக்கும் ஒரு முயற்சி என்பது தெரிய வருவதால், கட்சி விரோத போக்கு நடவடிக்கை என்று முடிவு செய்து அன்புமணியை பாமகவின் செயல் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது என முடிவு செய்து நீக்கப்படுகிறார்.
மேலும் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு அவருடைய நடவடிக்கைகள் மற்றும் போக்கு மிகப்பெரிய குந்தகம் விளைவிக்கும் செயலாக உள்ளதால் பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவரை உடனடியாக நீக்குவது என முடிவு செய்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் இந்த நிமிடம் முதல் அவர் நீக்கப்படுகிறார். பாமகவைச் சேர்ந்தவர்கள் அவருடன் எந்த தொடர்பும் கட்சி சார்பாக வைத்துக் கொள்ளக்கூடாது.
அப்படி மீறி வைத்துக் கொண்டால் அவர்கள் மீதும் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெளிவுபடுத்தி இந்த முடிவு எடுக்கப்படுகிறது. அவரைச் சுற்றி இருப்பவர்களும் நாங்கள் வளர்த்த பிள்ளைகள் தாம். பெரிய பெரிய பொறுப்புகளை எல்லாம் அவர்களுக்கு கொடுத்து வளர்த்த பிள்ளைகள் தான். ஆனால் அவர்கள் ஏனோ தெரியவில்லை. அவரோடு (அன்புமணி) சேர்ந்து அவர்களும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு அது ஒரு தனி அணியாக செயல்படுவது போன்ற ஒரு தோற்றத்தை அல்லது தனி கட்சியாக செயல்படுவதுபோன்ற தோற்றத்தை செய்து வருகிறார்கள்.
எனக்கு அவர்கள் பெயரில் வருத்தம் இருந்தாலும் அவர்கள் திருந்த வாய்ப்புள்ளது. என்பதாலே அவர்களை நான் மன்னிக்க தயாராக இருக்கிறேன். இன்று முதல் என்னுடைய இரா. என்ற தலைப்பெழுத்தை அன்புமணி போட்டுக் கொள்ளலாம், பெயரை பயன்படுத்தக் கூடாது. மற்ற பொறுப்புகளில் இருப்பவர்கள் மேலும் தவறு செய்யாமல் இந்த கட்சியை வளர்க்க வேண்டுமென்று இந்த நேரத்தில் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
* பொய்...பொய்...பொய்... வேவு...வேவு...வேவு...
‘‘என்னோடு 40 முறை பேசியதாக அன்புமணி சொல்லி இருக்கிறார். அவர் பேசுவது எல்லாம் பொய், உண்மையே கிடையாது. அதனால் என்னுடைய மனம் எவ்வளவு வருந்தியிருக்கும். 16 குற்றச்சாட்டுகளில் அதுவும் ஒரு குற்றச்சாட்டு. அதாவது என்னையே உளவு பார்ப்பது, என் ஷோபா அருகிலேயே கருவி வைத்தார்கள். காவல் துறைக்கும், சைபர் கிரைமிற்கும் சொல்லி விசாரணை நடந்து வருகிறது. யாரை யார் வேவு பார்ப்பது.
இங்கே இந்த இடத்திலே வேவு பார்க்க என்ன இருக்கிறது. அதுவும் மற்றவர்கள் வேவு பார்க்கலாம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் அல்லது என்னை பிடிக்காதவர்கள்கூட வேவு பார்க்கலாம். ஆனால் அன்புமணி வேவு பார்க்கலாமா?. என்னை தொண்டர்கள் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று கோஷம் போடுவார்கள். அந்த இரும்பே இன்று உருகி கெட்டு, 46 ஆண்டு காலம் அரும்பாடுபட்டு வளர்த்த இந்த கட்சி இவரால் அழிகிறதே என்று மனம் பொறுக்க முடியவில்லை. அதனால்தான் இந்த முடிவு எடுக்க வேண்டி உள்ளது’’ என்று ராமதாஸ் தெரிவித்தார்.
* செயல் தலைவர் பதவி யாருக்கு?
ராமதாஸ் அளித்த பேட்டியில், ‘‘செயல் தலைவர் என்ற பதவி இருக்கும். அது யாருக்கு எப்போது கொடுப்பது என்பதை நான் முடிவு செய்வேன்’’ என்றார். ‘‘பசுமை தாயகம் தலைமை பொறுப்பில் சௌமியா அன்புமணி தொடர்ந்து இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறதா?’’ என்ற கேள்விக்கு, ‘‘அதுபற்றி எல்லாம் சொல்ல தேவையில்லை’’ என்றார். ‘‘தேர்தல் ஆணையத்தில் பாமக தலைவர் என்ற பொறுப்பு அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறி வருகிறார்களே?’’ என்ற கேள்விக்கு, ‘‘அப்படி எதுவுமில்லை, பொய் பொய், பொய்.
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தனது மகளை கட்சியில் இருந்தே தூக்கி போட்டு விட்டார். நிறைய உதாரணங்கள் இருக்கிறது’’ என்றார். ‘‘அன்புமணி நேரிலோ, கடிதம் மூலமாகவோ தற்போது பதில் கொடுத்தால் ஏற்பீர்களா?’ என்ற கேள்விக்கு, ‘‘அவர் கொடுக்கப் போவதும் இல்லை, அது நடக்கப் போவதும் இல்லை. சொல்லுவாங்க பழமொழி. அத்தைக்கு மீசை முளைத்தால்...’’ என்றபடி சிரித்தார். ‘‘வடிவேல் ராவணன், தலைவர் பதவியில் அன்புமணியை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை’’ என கூறி இருக்கிறாரே?’ என்ற கேள்விக்கு, ‘‘இதெற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை’’ என்றார்.
* யாரை ஆதரிப்பது? வக்கீல்கள் குழப்பம்
பாமக நிறுவனர் நான்தான், தலைவரும் நான்தான், அன்புமணி செயல் தலைவர்தான் என்று ராமதாஸ் கூறி வருகிறார். இல்லை, தலைவர் நான்தான், என்னைத்தான் தேர்தல் ஆணையம் தலைவராக அங்கீகரித்துள்ளது என்று அன்புமணி பேட்டியளித்து வருகிறார். இரு தரப்பும் போட்டி போட்டு பொதுக்குழு, செயற்குழுக்களை கூட்டி முடிவெடுத்து வருகின்றனர். ராமதாஸ் நியமித்த நிர்வாகிகளை அன்புமணி நீக்கி வருகிறார். அன்புமணி நியமித்த நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வருகிறார்.
இரு தரப்பும் தனித்தனியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார்கள். இந்த வரிசையில் ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர் பிரிவு தலைவராக கோபு நியமிக்கப்பட்டுள்ளார். அன்புமணி தரப்பில் கே.பாலு வழக்கறிஞர் பிரிவு செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் தற்போது போட்டி போட்டு மீடியாக்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர்.
தங்கள் தலைவர்தான் அங்கீகரிக்கப்பட்டவர் என்று ஒருவரும், தங்கள் தலைவர்தான் கட்சியின் வானளாவிய அதிகாரம் படைத்தவர் என்று ஒருவரும் பேட்டியளித்து வருகிறார்கள். இதனால், கட்சியின் வழக்கறிஞர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தந்தை மகனுக்கு இடையில் உள்ள பிரச்னை தேர்தலுக்கு முன்பாவது முடிந்தால் நல்லது என்று பாமக வழக்கறிஞர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
* அன்புமணி அவசர ஆலோசனை
பாமக தலைவர் அன்புமணி கடந்த ஜூலை மாதம் முதல் உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதியில் நடைபயண பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் இரவில் கடலூர் தேவனாம்பட்டினத்தில் தங்கினார். நேற்று காலை அவர் சொத்திக்குப்பம் கிராமத்தில் இருந்து படகு மூலமாக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சென்று, அங்குள்ள மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் கடல் சீற்றம் காரணமாக படகு பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அன்புமணியை செயல் தலைவர் பதவி மற்றும் பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து ராமதாஸ் நேற்று உத்தரவிட்டார். இதனால் அப்செட்டான அன்புமணி, நேற்று காலை முதலே பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த நிலையில் மதியம் 12 மணி வரை அவர் கெஸ்ட் அவுசிலேயே தங்கியிருந்தார்.
அங்கு கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அன்புமணி பாமகவிலிருந்து நீக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் கெஸ்ட் அவுஸ் முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
* ‘ராமதாசுக்கு பதில் சொல்வதை விட முக்கிய வேலை இருக்கிறது’
பாமகவில் இருந்து நீக்கப்பட்ட பின் நேற்று பிற்பகல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடலூர் கெஸ்ட் ஹவுஸில் இருந்து அன்புமணி புறப்பட்டார். அவரிடம், ‘‘கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது’’ குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், இது சம்பந்தமாக வழக்கறிஞர் பாலு பேட்டியளிப்பார். எனது பிரசார பணிகள் தொடரும். எனக்கு அதைவிட முக்கிய வேலைகள் இருக்கிறது எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
* ‘இது எங்களுக்கு பின்னடைவு இல்லை அன்புமணி தனி கட்சி தொடங்கலாம்’
ராமதாஸ் அளித்த பேட்டியில், ‘இந்த கட்சியை விட்டு நீக்கி விட்டீர்கள். அன்புமணி என்ன செய்ய வேண்டும் என கேட்கலாம். அதற்கும் நான் விடை சொல்கிறேன். அவர் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம். இது ஏன் திடீரென சொல்கிறீர்களே என நீங்கள் கேட்கலாம். இதை நான் ஒருவருடத்திற்கு முன்பே 3 முறை சொல்லி இருக்கிறேன். இது (பாமக) ஒரு தனி மனிதர் ராமதாஸ் ஆரம்பித்த கட்சி.
அதனாலே இதிலே உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. அது பிள்ளையாக இருந்தாலும், அல்லது மற்றவர்களாக இருந்தாலும் உரிமை கொண்டாட முடியாது. கட்சியின் விதிகள்படி ஒழுங்கு நடவடிக்கை குழு 2முறை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும், கடிதத்தை மட்டும் வாங்கிக் கொண்டார். நேரில் வரவில்லை, தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை, கடிதமும் அனுப்பவில்லை. அதனால் நான் இந்த முடிவை எடுக்க வேண்டிய ஒரு நிலை.
பாமகவை பொறுத்தவரை இது பின்னடைவு என சிலர் சொல்லலாம். இது பின்னடைவு கிடையாது. அதாவது ஒரு பயிர் விதைத்தால் களை முளைக்கத்தான் செய்யும். அதற்காக பயிரை விளைவிக்காமல் இருப்பதில்லை. அதனால் களையை நீக்கி விட்டோம். கட்சிக்கு குந்தகமாக இருந்த அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டோம். அவரோடு இருக்கின்ற அந்த பிள்ளைகள், அவருக்கு இப்போது நான் சொல்கின்றபடி கட்சியை தொடங்கினாலும் அந்த கட்சி வளராது’’ என்று கூறினார்.
* பாமக தலைவராக தொடருவார்... அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாசுக்கு அதிகாரம் கிடையாது: நீங்க வேணும்னா கோர்ட்டுக்கு போங்க, வழக்கறிஞர் பாலு பதிலடி
அன்புமணி தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு சென்னையில் நேற்று அளித்த பேட்டி: அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை. கட்சி விதிகளின்படி அன்புமணியே பாமகவின் தலைவர். ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளை 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு, உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு தீர்மானம் குறித்து எங்கள் விளக்கத்தை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆய்வு செய்து, பாமக தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகாலத்தை அடுத்த 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தலைவர், பொருளாளர், செயலாளர் பதவியில் எந்த குழப்பமும் இல்லை. அன்புமணி தரப்பு நிர்வாகிகளையே தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கட்சி விதிகளின்படியும், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தின்படியும் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு செல்லத்தக்கது அல்ல.
ராமதாஸ் உத்தரவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது. பாமக தலைவராக அன்புமணியும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் தொடர்கிறார்கள். இதனால், அன்புமணியை நீக்கியது செல்லாது. ராமதாஸ்க்கு அதிகாரம் இல்லை. பதவி நீக்கம் செய்வது, கூட்டங்களை நடத்துவது ஆகியவற்றை மேற்கொள்ள பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பாமக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள தலைவருக்கே அதிகாரம் உள்ளது. நிர்வாகப் பணிகளில் தலையிட நிறுவனருக்கு அதிகாரம் இல்லை. பாமகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் என்ற முறையில் இதனை சொல்கிறேன்.
பாமகவின் தலைவர் அன்புமணி என்றே பயன்படுத்த வேண்டும். அன்புமணி உளவு பார்த்தார் என்று சொல்வது தவறு. உளவு பார்க்கும் பழக்கம் அன்புமணிக்கு கிடையாது. உளவு பார்த்திருந்தால் இப்படி ஒரு சூழல் எழுந்திருக்காது. வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. கட்சியின் செய்தி தொடர்பாளராக தேர்தல் ஆணையம் கூறிய கருத்துகளை உங்களிடம் கூறி உள்ளேன். நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது ராமதாஸ் தரப்பு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
* தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதா? தேர்தல் ஆணைய ஆவணத்தை பாலு வெளியிட வேண்டும்: பாமக பொதுச்செயலாளர்
அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் கிடையாது என வழக்கறிஞர் பாலு கூறியிருந்த நிலையில், தைலாபுரத்தில் பாமக பொதுச்செயலாளர் முரளிசங்கர் கூறுகையில், ‘‘பாமகவை தொடங்கியவர், விதிகளை உருவாக்கியவர் ராமதாஸ், எல்லோருக்கும் பதவிகள், பொறுப்புகள் வழங்கியவர் ராமதாஸ். ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என கூறுவதற்கு பாலுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. 46 ஆண்டுகளாக எல்லா நிர்வாக முடிவுகளையும் எடுத்தவர் ராமதாஸ். தற்போது அதனை கட்டுப்படுத்தாது என கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.
மேலுல் தேர்தல் ஆணையம் ஆவணங்களை வைத்து இன்னார்க்குதான் கட்சி என எப்போதும் கூறியது கிடையாது, நீதிமன்றத்திற்கு செல்லவே அறிவுறுத்துவார்கள். சின்னமும், கட்சியும் எங்களுடையது என பாலு கூறுகிறார். அதற்கான ஆதாரத்தை தற்போது வரை அவர்கள் வெளியிடவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு ஆதாரம் அவர்களிடம் இல்லை.
வழக்கறிஞர் பாலு தவறான தகவலை கொடுத்து பொதுமக்களிடம் தவறான கண்ணோட்டத்தை உருவாக்க முயற்சிக்கிறார். ராமதாஸ் உருவாக்கிய விதிகளை அவருக்கு எதிராக திருப்பும் பாலுவை வன்மையாக கண்டிக்கிறோம். ராமதாஸ் எடுக்கும் முடிவுதான் இறுதியானது, அவரது அறிவுறுத்தலின்பேரில் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
* நீக்கிய பிறகும் தலைவர் பெயரில் நியமன அறிவிப்பு
பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்த நிலையில், நேற்று புதுச்சேரி மாநில நிர்வாக குழு நியமனம் (10ம்தேதி முதல்) தொடர்பான அறிவிப்பு அன்புமணி பெயரில் வெளியானது. அந்த லெட்டர்பேடில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என இடம்பெற்றிருந்தது. அதேபோல் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் என்ற பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனால் அதிகாரப்பூர்வ பாமக யார்? என்ற சலசலப்பு தொண்டர்கள் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
* மகள் ஸ்ரீகாந்திக்கு பதவியா?
‘‘மகள் ஸ்ரீகாந்தியை முன்னிறுத்துவதற்காக மகனை புறக்கணிக்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு ‘‘அதெல்லாம் ஒன்றும் கிடையாது. அந்த மாதிரியான எண்ணமும் கிடையாது’’. ‘‘செயல் தலைவர் பதவியை உங்களது மகளுக்கு கொடுப்பீர்களா?’ என்ற கேள்விக்கு, ‘‘போதும்ப்பா... போதும்ப்பா... நீங்கள் கேட்கிற கேள்வியெல்லாம் தேவையில்லாதது மாதிரி இருக்கு’’ என சிரித்தபடி அடுத்த வியாழக்கிழமை சந்திப்போம் என்றார்.
அன்புமணியை நீக்கும் முடிவுக்கு வந்தது ஏன்?
ராமதாஸ் கூறுகையில், ‘மூத்தவர்கள் 4, 5 பேர் அன்புமணிக்கு அறிவுரை சொல்லி அப்பா சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள் என்று சொன்னபோதும் அவர் எதையும் கேட்காமல், மதிக்காமல் சென்றார். பழ.கருப்பையா கூட, தந்தையிடம் மகன் தோற்பது பெரிய தவறல்ல என பலமுறை அறிவுரை சொல்லி இருக்கிறார். அதையெல்லாம் கேட்காமல் இந்த மாதிரியான நிலை வருவதற்கு அவர் காரணமாக இருந்தார்.
பாரத பிரதமர் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்தபோது அவர் பேசிய பேச்சில்கூட, தனயன் செயல் தந்தையின் செயலைவிட உயரமாக இருக்கக் கூடாது என தஞ்சை பெரிய கோயிலின் உயரம், கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டப்பட்ட உயரம், அது பெரிய கோயிலின் உயரத்தைவிட தாழ்வாக இருந்ததை சுட்டிக் காட்டி ஆக, மிக அழகாக பிரதமரும் இதை அழமாக சொல்லி இருக்கிறார். இப்படி பலர் அவருக்கு அறிவுரை சொன்னாலும் அவர் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அதனால்தான் இந்த முடிவை எடுத்தோம்’ என்றார்.


