கட்சி நிகழ்ச்சிக்கு அழைக்காததால் அதிமுக ஐடி விங் நிர்வாகி-பகுதி செயலாளர் திடீர் கைகலப்பு: சாலையில் கட்டிப்புரண்டதால் பரபரப்பு
சென்னை: கட்சி நிகழ்ச்சிக்கு அழைக்காததால் அதிமுக ஐடி விங் நிர்வாகி, பகுதி செயலாளர் இடையே கைகலப்பு ஏற்பட்டு சாலையில் கட்டிப்புரண்டு குடுமி பிடி சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடுங்கையூர் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (38), அதிமுக ஐடி விங்கில் இணைச் செயலாளராக உள்ளார். அதிமுக மகளிர் அணி மேற்கு பகுதி செயலாளர் ஜமுனா. இருவரும் நட்பாக பழகி வந்தனர். ஜமுனாவின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் பிரியதர்ஷினி அவருடன் பழகுவதை தவிர்த்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜமுனா, பிரியதர்ஷினியிடம் ஏன் என்னை கட்சி வேலைக்கு அழைப்பதில்லை என கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜமுனா, ஏன் என்னைப் பற்றி எல்லோரிடமும் தவறாக கூறுகிறாய் என்று கேள்வி கேட்டு பிரியதர்ஷினியை தாக்கியதோடு சாலையில் கட்டிப்புரண்டு குடுமி பிடி சண்டையிட்டனர். மேலும், ஜமுனா தனது கணவருடன் சேர்ந்து பிரியதர்ஷினியின் கணவரையும் தாக்கி உள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்துள்ளனர். மேலும், காயமடைந்த பிரியதர்ஷினியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பிரியதர்ஷினி அளித்த புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கட்சி பெண்கள் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
