Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கட்சியை ஒன்றிணைக்க சின்னமம்மியும் குக்கரும் எடுத்திருக்கும் புதிய முடிவை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலைக்கட்சி தலைவருக்கு கிடைத்திருக்கும் புதிய முரட்டு பக்தனால் ரத்தத்தின் ரத்தங்கள் சிரிப்பா சிரிக்காங்களாமே தெரியுமா..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘கட்சியை காப்பாற்றுவதற்கு கத்திமேல் நடக்கும் நிலையில் இருக்காராம் இலைக்கட்சி தலைவர். ஆனால் அவரது சொந்த ஊரில் நடக்கும் கூத்தை பார்த்தாலே தொண்டர்களுக்கு சிரிப்புதானாம்.. மாநகர கட்சிக்கு மூன்று பொறுப்பாளர்கள் இருக்காங்களாம்.. இதில் மொரப்பூர்காரரின் கை ஓங்கியிருப்பது என்பது எல்லோருக்குமே தெரியுமாம்..

என் மீது புகார் இருந்தால் பொதுச்செயலாளரிடம் நேரில் சந்தித்து கொடுக்கலாம்னு அவர் அதிரடியாக சொல்வதன் மூலம் தனக்கு இருக்கும் செல்வாக்கை சொல்லாமல் சொல்வதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. அதோடு இவரையே தூக்கி சாப்பிடும் முரட்டு பக்தர் ஒருவர் கொண்டலாம்பட்டியில் இருக்காராம்.. பொதுச்செயலாளரின் முரட்டு பக்தன் என தனக்கு தானே சொல்லிக்கொள்வாராம்.. இவர் ஒருநாள் தனது செல்போன் ஸ்டேட்டஸில் தப்பு பண்ணிட்டீயே.....ன்னு ஒரு சினிமா வசனத்தை வச்சிருந்தாராம்..

இது தீயாய் பரவிய நிலையில், பொறுப்பாளர் அவரை அழைத்து கனிவா பேசினாராம்.. இதனால மனம் உருகிப்போன அந்த முரட்டு பக்தர், அன்று முதல் அந்த பொறுப்பாளரின் முரட்டு அடிபொடியாகிப் போனாராம்.. இதன்பிறகு தான் அவர் முழு ஆட்டத்தையே ஆரம்பிச்சிருக்காராம்.. கட்சியில் எந்த பதவி வேண்டுமானாலும் சொல்லுங்க.. இப்போதுதான் பொறுப்பாளரை பார்த்துட்டு வந்திருக்கேன்.. வாங்க போய் பேசலாமுன்னு சொல்லி எல்லோரையும் அழைக்கிறாராம்.. இதனை கேட்கும் ரத்தத்தின் ரத்தங்கள் இதென்ன புதுசா இருக்குன்னு சிரிப்பாய் சிரிக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டெல்லி ரகசிய உத்தரவால் புல்லட்சாமிக்கு எதிரான நிலைப்பாட்டில் சைலண்ட் மூடில் இருக்கிறதாமே அதிருப்தி கோஷ்டி..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ஆண்டின் நிதி நிலை அறிக்கைக்காக சபை கூடி இருக்கிறதாம்.. கடந்த கூட்டத்தின்போது ஒன்றிய ஆளும் தரப்பு கட்சி அதிருப்தி கோஷ்டி உறுப்பினர்கள் புல்லட்சாமிக்கு எதிராக குரல் எழுப்பிய நிலையில் தேஜ அணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதாம்.. பஞ்சாயத்து டெல்லி வரைக்கும் சென்றதாம்..

விரக்தியில் உள்ள புல்லட்சாமியோ வரவுள்ள பொதுத்தேர்தலில் தமிழகத்திலும் போட்டியிட வியூகம் வகுத்துவிட்ட நிலையில் தேஜ கூட்டணியும் உறுதியற்ற நிலைப்பாட்டில் இருக்கிறதாம்.. ஒன்றிய உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் சேகரித்துள்ள ஒன்றிய ஆளும் தரப்பானது அதிருப்தி கோஷ்டிகளுக்கு மறைமுக ஆர்டர்களை போட்டு இருக்கிறதாம்.. அதாவது தேர்தல் நெருங்கி விட்டதால் இனியும் சபைக்குள் புல்லட்சாமிக்கு எதிரான நிலைப்பாடு கூடாது என்பதுதான் முதல் உத்தரவாம்..

இதனால் சபை நிகழ்வில் அரசுக்கு ஆதரவாக சைலண்ட் மூடில் இருக்கிறதாம் அதிருப்தி கோஷ்டி தரப்பு..’’ என்றார் விக்கியானந்தா. கலெக்டரின் பெயரை சொல்லி கல்லா கட்றாங்களாமே’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்ட கலெக்டர் ஆபீசில் நேர்முக உதவியாளர்கள் இருவர் உள்ளனர். இதில் கடவுள் பெயரைக் கொண்ட ஒருவர் கலெக்டரின் பெயரை சொல்லி அனைத்து துறை அதிகாரிகளிடம் மிரட்டி கல்லா கட்டி வருகிறராம். தற்போது ஹெல்த் டிபார்ட்ெமன்ட்டில் தற்காலிக பணியாளர்கள் எடுத்தாங்க.

அதில் தனக்கு விடாப்படியாக 5 பேருக்கு பணி கொடுக்க வேண்டும் என்று கேட்டு அந்த பணியையும் வாங்கியுள்ளார். அதற்கு அவர் 5 பேரிடமும் பணத்தையும் பெற்றுள்ளாராம். பல்வேறு அதிகாரிகளிடம் மாதம்தோறும் எனக்கு மாமூல் தரவேண்டும் என்றும் நிர்பந்திகிறராம். அப்படி கொடுக்காத அதிகாரிகளை கலெக்டரிடம் இவர் பணிகளை சரிவர செய்வதில்லை என்று போட்டு கிறாராம். மாவட்ட உயரதிகாரிகளை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி வருவதாகவும் இதனால் உயர் பதவியில் இருக்கும் மாவட்ட அதிகாரிகள் இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில் தற்போது இருந்து வருகின்றனர்.

மாவட்டத்தின் கலெக்டரின் பெயரை சொல்லியும் இவர் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் திட்ட பணியாளர்கள், மாவட்ட திட்ட அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை மிரட்டியும் வருவதாக கலெக்டர் அலுவலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை தீவிரமா செஞ்சிட்டு இருக்காங்களாமே சின்னமம்மியும் குக்கரும்..’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா.

‘‘நெற்களஞ்சியம் மாவட்ட மாஜி அமைச்சர் வைத்தியானவரை குக்கர் கட்சி தலைமையானவர் மற்றும் சின்னமம்மி ஆகியோர் சந்திக்க நெற்களஞ்சியத்துக்கு தனித்தனியாக வந்திருக்காங்க. குக்கர் கட்சியின் தலைமை வைத்தியானவரை சந்திக்க சென்ற தகவல் தெரிய வந்த. சின்னமம்மி, வரும் வழியில் பாதியில் காரை நிறுத்திக்கொண்டாராம்... அவர், சந்தித்து சென்ற பிறகு நாம் வைத்தியானவர் வீட்டுக்கு செல்லலாம் என கூறியுள்ளார். குக்கர் தலைைமையானவர் வைத்தியானவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பிறகு அங்கிருந்து சிக்னல் வந்ததாம்...

இதனைதொடர்ந்து சின்னமம்மி வைத்தியானவர் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். இவர்களது தனித்தனி சந்திப்பின் போது அரசியல் நிலவரம் பற்றி பேசிக்கிட்டாங்களாம். தற்போது டெல்டாவில் இது டாப்பிக் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்.. இந்த தகவல் சேலத்துக்காரர் கவனத்துக்கு அவரது டீம் கொண்டு சென்றுள்ளார்களாம். இலைத்தலைவரை கழற்றிவிட்டு கட்சியை ஒன்றிணைக்கும் வேலையில் இருவரும் படாதபாடு படுகிறார்கள். ஆனால் இது ஒன்றும் வேலைக்காகாது என கூறி சேலம் டீம் சிரித்து வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.