Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாடாளுமன்றத் துளிகள்

இலங்கை சிறையில் வாடும் 141 தமிழ்நாடு மீனவர்கள்: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் ஒன்றிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு: சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்களை அவ்வப்போது இலங்கை அதிகாரிகள் கைது செய்து வருகிறார்கள். இருப்பினும் இந்தியா தொடர்ந்து நடத்தி வரும் ராஜதந்திர முயற்சிகளால், இந்த ஆண்டு கைது செய்யப்பட்ட 351 தமிழ்நாடு மீனவர்களை மீட்டு, தாயகம் திரும்ப வைத்துள்ளது.

இருப்பினும் ஒன்றிய அரசுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் நவ.22 வரை 141 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை காவலில் உள்ளனர். அவர்களில் 45 மீனவர்கள் விசாரணை கைதியாக உள்ளனர். 96 பேர் தற்போது தண்டனை அனுபவித்து வருகின்றனர். கொழும்பில் உள்ள நமது தூதரகம், யாழ்ப்பாணத்தில் உள்ள தூதரகத்தினால் மீனவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கைது செய்யப்பட்ட 351 மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. தற்போது மேலும் 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்

மாநிலங்களைவையில் திமுக எம்பி டாக்டர் கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் தொகான் சாஹூ எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 11 நகரங்களுக்கு 100 சதவீத உதவி வழங்கப்படுகிறது. இந்த நகரங்கள் சுமார் ரூ.10,879 கோடி நிதி பெற்றுள்ளன. இதில் மொத்த தொகையில் ரூ.10,490 கோடி விடுவிக்கப்பட்ட நிதியாகும்.

தமிழ்நாட்டில் 11 ஸ்மார்ட் சிட்டிகள் வழங்கிய தரவுகளின்படி மொத்தம் 733 திட்டங்களில், 708 திட்டங்கள் 97 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 திட்டங்கள் ரூ.2,514 கோடி மதிப்பில் செயல்படுத்தும் நிலையில் உள்ளது. இருப்பினும் கூடுதல் நகரங்களை இணைப்பது குறித்து அரசின் பரிசீலனையில் இல்லை. மேலும் அனைத்து நகரங்களுக்கான திட்டங்களும் வரும் 2025ம் ஆண்டு மார்ச் 31க்குள் முடிக்கப்படும் ” என்று பதிலளித்துள்ளார்.

5 ரயில்வே திட்டங்கள் தமிழகத்தில் நிலுவை

மக்களவையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் எழுப்பியிருந்த கேள்வியில், “தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள மற்றும் செயல்படுத்தி வரும் ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசு போதுமான நிதியை வழங்கியுள்ளதா? அதன் விவரங்கள் என்ன?” என்று கேட்டிருந்தார். இதற்கு ஒன்றிய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “ரயில் திட்டங்கள் குறித்த விவரங்கள் இந்திய ரயில்வே இணையதளத்தின் மூலம் பொதுத்தளத்தில் கிடைக்கின்றன. தமிழகத்தில், நிலம் கையகப்படுத்துதல் தாமதமானதால், ‘‘திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய பாதை (185 கிமீ), அத்திப்புட்டு - புத்தூர் புதிய பாதை (88 கிமீ), மொரப்பூர் - தர்மபுரி (36 கிமீ), மன்னார்குடி-பட்டுக்கோட்டை (41 கிமீ) மற்றும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை (52கிமீ) ஆகிய ஐந்து திட்டங்கள் நிலுவையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

டோல்கேட்டுகளில் ரூ1.44 லட்சம் கோடி வசூல்

தேசிய நெடுஞ்சாலைகளில் 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அரசு மற்றும் தனியார் கூட்டாண்மை (பிபிபி) மாதிரியின் கீழ் தற்போது செயல்படும் டோல்கேட் மூலம் ஒன்றிய அரசு ரூ.1.44 லட்சம் கோடியை சுங்கவரியாக வசூலித்துள்ளது என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

1.12 கோடி மனுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன

கடந்த 5 ஆண்டுகளில் 1.12 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ இந்த புகார்கள் மையப்படுத்தப்பட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு போர்டல் மூலம் பெற்றப்பட்டன. 2020-2024 வரை மொத்தம் 1,12,30,957 குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. 2024 ஜனவரி-அக்டோபர் வரை போர்ட்டலில் 23,24,323 புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. 2024ல் 13 நாட்களில் மக்களின் புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன’ என்றார்.

5,245 நீதிபதிகள் பணியிடம் காலி

நாடு முழுவதும் துணை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் 5,245 நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளதாகவும், 25 உயர் நீதிமன்றங்களில் 364 காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் 2 காலியிடம் இருப்பதாகவும் மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்தார்.

9 லட்சம் வழக்குகள் நிலுவை

மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 11 மாதங்களில் 9.22 லட்சமாக உயர்ந்துள்ளது.நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 3.43 கோடியாக உள்ளது என்று சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்தார்.

8 புதிய நகரங்களை உருவாக்க தலா ரூ1000 கோடி

நாடு முழுவதும் 23 மாநிலங்களில் இருந்து 28 புதிய நகரங்களை உருவாக்க பரிந்துரை வந்துள்ளதாக வீட்டுவசதி, நகர்புற இணையமைச்சர் டோகன் சாஹூ தெரிவித்தார். 15வது நிதிக் கமிஷன் அடிப்படையில் 8 மாநிலங்களில் புதியதாக 8 நகரங்களை உருவாக்க ரூ.8,000 கோடி செலவழிக்க பரிந்துரைத்துள்ளது. இந்த நிதியின் மூலம் ஒரு மாநிலத்திற்கு ஒரே ஒரு புதிய நகரம் அமைக்கப்படும்’ என்றார்.

அங்கன்வாடிகளில் 5 வயதுக்குட்பட்ட 38.9% குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைவு

இந்தியா முழுவதும் உள்ள அங்கன்வாடிகளில் சேர்க்கப்படும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளின் வளர்ச்சி குன்றியுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்தார். அங்கன்வாடிகளில் ஐந்து வயதுக்குட்பட்ட 7.54 கோடி குழந்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில், 7.31 கோடி வளர்ச்சி அளவிடப்பட்டது. இதில் 38.9 சதவீதம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 17 சதவீதம் பேர் வயதுக்கு ஏற்ற எடை குறைவாகவும், 5.2 சதவீதம் பேர் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாதவர்களாக உள்ளனர் என்று தெரிவித்தார்.