புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2வது நாளாக நேற்றும் கடும் அமளிக்கிடையே முக்கிய மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. நீட் வினாத்தாள் கசிவு குறித்த மாணவர்கள் போராட்டம், ராமர் கோயில் நன்கொடை திருட்டு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்கக் கோரி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி செய்து வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களில், இக்கூட்டத்தொடரில் பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா குறித்து விரிவான விவாதம் நடத்தி மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது வார தொடக்கமான நேற்று முன்தினம் இரு அவைகளிலும் அமளிக்கிடையே விவாதமின்றி சில மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியது.
இந்நிலையில், நேற்றும் இரு அவைகளிலும் கடும் அமளி நடந்தது. மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியதும், அரசு பத்திரங்களில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் மீதான வருமான வரியை ரத்து செய்த அவசர சட்டத்திற்கு பதிலாக வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதாவை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா கட்டணம் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், வருமான வரி சட்டம் மற்றும் நிதிச்சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்கிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்க பெயர் கொடுத்திருந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் அழைக்கப்பட்ட போதிலும் அவர்கள் பேச முன்வரவில்லை. இதைத் தொடர்ந்து கூச்சல்களுக்கு மத்தியில் ஒதுக்கீடு எண் 3 மசோதா 2026 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மார்ச் 31, 2023-ல் முடிவடைந்த நிதியாண்டில் குறிப்பிட்ட சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகமாகச் செலவிடப்பட்ட தொகையை ஈடுகட்ட, ஒருங்கிணைந்த நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கீடு செய்வதற்கான அனுமதியை வழங்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டதும், நேற்றைய அலுவல்கள் முடிக்கப்பட்டதாக அவை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதே போல மாநிலங்களவை காலையில் கூடியதும் அமளி காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அவை கூடிய போது, போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர காவல்துறை தாக்குதல் தொடர்பாக அமித்ஷா விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்தனர். அந்த அமளிக்கு இடையே, பிறப்பு மற்றும் இறப்பு திருத்த மசோதா குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா பிறப்பு, இறப்பை தாமதமாக பதிவு செய்வதை தடுக்க கடுமையான விதிமுறைகளை கொண்டுள்ளது.
இதுவரை மழைக்கால கூட்டத்தொடரில், 5 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில், பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா மற்றும் தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா ஆகியவை இரு அவைகளிலும் நிறைவேறி இருக்கிறது.
* மோடி, அமித்ஷாவுக்கு பயம்: கார்கே அதிரடி
ராமர் கோயில் நன்கொடை திருட்டு மற்றும் மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை குறித்து பதிலளிக்காமல் தவிர்ப்பதன் மூலம் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பயத்தில் இருப்பதாகவும், நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகவும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த 2 விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தினால் உண்மை வெளிவரும் என்றும், நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட மோடியும் அமித் ஷாவும் அவைக்கு வர வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் கார்கே கூறி உள்ளார். பாஜ எம்பி சம்பித் பத்ரா கூறுகையில், ‘‘காங்கிரஸ் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை முடக்குகிறது. முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடத்த விடாமல் தடுக்கிறது’’ என குற்றம்சாட்டினார்.
* எதிர்க்கட்சிகள் போராட்டம்
ராமர் கோயில் நன்கொடை திருட்டு, மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற நுழைவாயிலின் படிக்கட்டு பகுதியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, சமாஜ்வாடியின் டிம்பிள் யாதவ், தர்மேந்திரா யாதவ், திரிணாமுல் காங்கிரசின் சகாரிகா கோஷ், ஆர்ஜேடியின் சஞ்சய் யாதவ், ஆர்எஸ்பியின் பிரேமசந்திரன் உள்ளிட்ட எம்பிக்கள் ‘அமித்ஷா பதிலளிக்க வேண்டும்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள், பேனர்கள் ஏந்தி கோஷமிட்டனர்.
