Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நாடாளுமன்ற புயல்

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று ெதாடங்க உள்ளது. வரும் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடக்கவுள்ள இக்கூட்ட தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதில் வருமானவரி திருத்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை திருத்த மசோதா, பிறப்பு, இறப்பு பதிவு திருத்தங்கள் குறித்த மசோதா, சிறு, குறு நடுத்தர நிறுவனங்களின் மேம்பாடு திருத்த மசோதா ஆகியவை முக்கியமானதாகும்.

மேலும் வந்தே மாதரம் பாடல் பாடும் போது இடையூறு விளைவிப்பவர்களுக்கு தண்டனை விதிக்கும் வகையில் தேசிய கவுரவ அவமதிப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேசமயம் பல்கலைக்கழக மானிய குழுவுக்கு மாற்றாக தேசிய உயர்கல்வி ஆணையம் கொண்டு வரும் மசோதா மற்றும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி 30 நாள் சிறை தண்டனை பெற்றால் அவர்களின் பதவியை பறிக்கும் 130வது அரசியலமைப்பு திருத்த மசோதா ஆகிய இரண்டையும் கடைசி நேரத்தில் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு நீக்கியுள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்ந்து இழுபறி நிலையிலே உள்ளது. முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றுவதில் வரும் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடுகள், இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் நாடாளுமன்றத்தில் இம்முறை நிச்சயம் புயலை கிளப்பும்.

அதிலும் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி 21வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஜந்தர் மந்தரில் இருந்து வலுக்கட்டாயமாக போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக கரப்பான் பூச்சி கட்சி நாடாளுமன்றம் நோக்கி இன்று பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்விவகாரமும் நாடாளுமன்றம் கூடியதும் பெரும் பிரச்னையை உருவாக்கும். நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக இந்திய அளவில் பல்வேறு அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

அதில் முக்கியமானது திமுக - காங்கிரஸ் கூட்டணி பிளவு, திரிணமூல் காங்கிரசில் பிளவு, சிவசேனாவில் மீண்டும் உடைப்பு, ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.க்கள் அணி மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களும் நாடாளுமன்றத்தில் இம்முறை நிச்சயம் பிரதிபலிக்கும். இதில் திரிணாமூல் காங்கிரசிலிருந்து பிரிந்த 20 எம்.பி.க்களும் தேசிய குடிமக்கள் கட்சி என்ற பெயரில் தனி ஆவர்த்தனம் செய்கின்றனர்.

இவர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்தும், பிளவுப்பட்ட சிவசேனா, ஆம் ஆத்மி எம்.பி.க்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கிய விவகாரமும் நாடாளுமன்ற விவாதத்தில் அனல் பறக்கும். அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடுகள் குறித்து இக்கூட்ட தொடரில் சமாஜ்வாடி கட்சி பல்வேறு கேள்விகளை எழுப்ப வாய்ப்புள்ளது. மேகதாது பிரச்னையில் தமிழர்கள் நலன் காக்க திமுகவும் ஓங்கி குரல் கொடுக்கும்.

இந்நிலையில் அவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு கோரியும், அவையில் நடக்கவுள்ள விவாதங்கள், தாக்கல் செய்ய உள்ள மசோதாக்கள் குறித்து தெரிவிக்க ஒன்றிய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தையும் நடத்தியது. இதில் அனைத்துக் கட்சி தலைவர்கள், முக்கிய கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியவுடன் இந்தியா கூட்டணியினர் வெளிநடப்பு செய்திருப்பது, இன்று தொடங்கவுள்ள புயலுக்கு ஒத்திகை எனலாம்.