Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

நாடாளுமன்றத்தில் நிலவும் முட்டுக்கட்டை ராகுல் காந்தியுடன் ஒன்றிய அமைச்சர் ரிஜிஜு சந்திப்பு: அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு கேட்டார்; தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல்?

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிலவும் முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வர ராகுல் காந்தியை சந்தித்து ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒத்துழைப்பு கோரினார். மேலும் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான நிலைப்பாட்டையும் கேட்டறிந்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கி வரும் 13ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இதில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான போலீசாரின் வன்முறை குறித்து அமித்ஷா அறிக்கை தர வேண்டுமெனவும், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்து வருகின்றன. இதனால் மக்களவையில் தொடர்ந்து 13வது நாளாக நேற்றும் கேள்வி நேரத்தை நடத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் கடும் முட்டுக்கட்டை நிலவுகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு கோரி ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, கவுரவ் கோகாய், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

சுமார் 50 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில் அமைச்சர் கிரண் ரிஜிஜு அவையின் சுமூகமான செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு கேட்டார். இதற்கு ராகுல் காந்தி, மாணவர்கள் போராட்ட விவகாரம் தொடர்பாக அமித்ஷா அறிக்கை தர வேண்டும், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவை செயல்படுவதற்கு இவை மிக அவசியமான நிபந்தனைகள் என கூறி உள்ளார். இதுதவிர, தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை நிறைவேற்ற 3ல் 2 பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை. அது இல்லாததால் மசோதாவை பாஜ அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த சூழலில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்த காங்கிரசின் நிலைப்பாட்டையும் ராகுலிடம் கிரண் ரிஜிஜு கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சி தலைவர்களையும் கிரண் ரிஜிஜு சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, சிறப்பு கூட்டத்தொடரை கூட்டாமல் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலேயே தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வர உள்ளதா என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மசோதாவுக்கு போதிய ஆதரவு இருக்கும் பட்சத்தில் புதிய மசோதாவை கொண்டு வர அதிக நேரம் தேவைப்படாது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதில், இக்கூட்டத்தொடரில் இதுவரை அவைக்குள் வராத அமைச்சர் அமித்ஷா விவாதத்தில் பங்கேற்று பதிலளிக்க இருக்கிறார். முன்னதாக நேற்றும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேனர் ஏந்தி போராட்டம் நடத்தினர். அமித்ஷா அவைக்கு வந்து பதிலளிக்க கோரி கோஷமிட்டனர்.

* உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 33ல் இருந்து (தலைமை நீதிபதி நீங்கலாக) 37 ஆக உயர்த்தும் அவசர சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கான, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த மசோதா கடந்த 3ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

* படுத்த 8 நொடியில் தூக்கம் வந்துவிடும்

பிரதமர் மோடி நேற்று காலை மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜ எம்பிக்களை சந்தித்து பேசினார். தனது அன்றாட வாழ்க்கை முறை குறித்து பேசிய பிரதமர் மோடி, படுத்த 8 விநாடியில் தூக்கம் வந்து விடும் என்றும், ஒருநாளுக்கு வெறும் 3 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும் கூறினார்.

* மேலும் ஒரு மசோதா விவாதமின்றி நிறைவேற்றம்

மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் வங்கியாளர்களின் பதிவேடுகள் சாட்சிய சட்ட மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. டிஜிட்டல் மற்றும் மெய்நிகர் வங்கிப் பதிவுகளை நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளத்தக்க சாட்சியங்களாக மாற்றக்கூடிய இந்த மசோதா பிற்பகல் 2 மணிக்கு பிறகு அவை தொடங்கியதும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் கடும் அமளி காரணமாக விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, அவையின் அலுவல்கள் முடித்துக் கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தொடரில் மக்களவையில் இதுவரை 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் 4 மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

மாநிலங்களவையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை திருத்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை காங்கிரஸ் எம்பி விவேக் டங்கா எழுப்ப முயன்றார்.

அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்வதாக காங்கிரஸ் துணைத்தலைவர் பிரமோத் திவாரி அறிவித்தார். எம்பிக்கள் வெளிநடப்பு செய்த பிறகும் விவாதம் தொடர்ந்து நடந்தது. அவை பிற்பகல் 12 மணிக்கு கூடிய போதும், அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் அவையை தொடர்ந்து நடத்தினார்.