Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்ய மாணவர்களை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்

*பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் பேச்சு

ஊட்டி : மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்ய பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ்குமார் பேசினார்.

ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று துவங்கியது. மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் மானியக்குழு தலைவர் ஜெகதீஷ்குமார் பேசியதாவது: உலகில் மக்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், உணவு, நீர், சுகாதாரம் உட்பட தேவைகளும் அதிகரித்துவிட்டன. ஆனால், இதை பூர்த்தி செய்ய உலகின் வளங்கள் குறிப்பிட்ட அளவிலேயே உள்ளன. இது பெரும் சவாலாக உள்ளது.

இந்தியாவில், 4 சதவீதம் நன்னீர் மட்டுமே உள்ளது. இதில் 80 சதவீதம் வேளாண்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. உலகில் 50 சதவீத பகுதிகளில் நீர் பற்றாக்குறை நிலவுகிறது. எரிசக்திக்கு நாம் புதைபடிவ எரிபொருட்களையே நம்பியுள்ளோம். தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த தொடங்கியுள்ளோம். ஆனால், இது உள்ள சிக்கல் என்னவென்றால் இதற்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகளை மறு சுழற்சி செய்ய முடியாது. அவை மிகவும் ஆபத்தானவை. இதனால், மாசு அதிகரிக்கும். நைட்ரஜன் பயன்பாடு அதிகரித்து, அவை நீர், நிலம் ஆகியவற்றில் படர்கின்றன.

தாவரங்கள் குறிப்பிட அளவிலேயே நைட்ரஜனை கிரகிக்க முடியும். நீர்நிலைகளில் படர்ந்துள்ள நைட்ரஜன், நீர்நிலைகளில் பாசியை உருவாக்கி, அவற்றில் உள்ள உயிரினங்கள் முழுவதுமாக அழித்து விடும். இதை சமாளிக்க அறிவியல், தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். கல்வி முறைகளை மாற்றியமைக்க வேண்டும். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். கூட்டுறவு பொருளாதாரத்தை நோக்கி செயல்பட வேண்டும். அறிவு, தொழில்நுட்பம் மற்றும் சமூக மாண்புகளே ஆகியவையே இந்த பெரும் சவால்களுக்கு தீர்வு ஏற்படுத்தும்.

உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை இதற்காக தயார்படுத்த வேண்டும். இந்தியாவில் 4.3 கோடி மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பையும், அதில் 11 சதவீதம் பேர் முதுநிலை கல்வியை பெறுகின்றனர். 1 சதவீத மாணவர்களே ஆராய்ச்சியை முடித்து முனைவர் பட்டம் பெறுகின்றனர். இளநிலை பட்டப்படிப்புகளில் பெரும்பாலான மாணவர்கள் கலை, அறிவியல், வணிகவியல் பட்டப்படிப்புகளிலேயே சேர்கின்றனர். திறன் மேம்பாட்டு கல்வி அவசியமாகுகிறது.

மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவை தேர்வு செய்ய பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். பிடித்த பாடம் மற்றும் வேலைவாய்ப்பு பெறும் பாடம் ஆகியவற்றை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். மேற்கத்திய நாடுகளில் ஜனவரி மற்றும் ஜூலை என இரு கல்வியாண்டுகள் செயல்பாட்டில் உள்ளன. இதை நமது நாட்டிலும் செயல்படுத்தலாமா? என ஆலோசிக்க வேண்டும். இதனால், மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.