Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கைவிடப்படும் பரந்தூர் விமான நிலைய திட்டம்..? பறிபோகும் தமிழகத்தின் வளர்ச்சி கனவுகள்

சிறப்பு செய்தி

தமிழ்நாட்டின் வான்வழிப் போக்குவரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கிலும், சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், பல ஆயிரம் கோடி முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில், பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 10 கோடி பயணிகளை கையாளுவது, இரண்டு அதிநவீன ஓடுதளங்கள், பிரமாண்டமான சரக்கு போக்குவரத்து மையம் மற்றும் பன்னாட்டு வர்த்தகங்களை ஈர்க்கும் ஏரோசிட்டி ஆகியவை இந்த திட்டத்தின் முக்கியக் கூறுகளாக உள்ளன. மேலும், விமான நிலையம் என்பதோடு மட்டுமல்லாமல் அதிவேக மெட்ரோ ரயில், விரைவுச்சாலை இணைப்புகள் என தமிழகத்தின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சியை மையப்படுத்திய திட்டமாக உருவாக்கப்பட்டது பரந்தூர் விமான நிலைய திட்டம்.

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தது. விமான நிலையம் அமைக்கும் திட்டத்தின் முதல்கட்டமாக கிராமப்புறங்களில் நிலம் எடுப்புப் பணிகளை மேற்கொண்டு, நில உரிமையாளர்களிடம் பத்திரப்பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, 1,700 ஏக்கருக்கு மேலாக, நில எடுப்புப் பணிகளை முடித்துள்ளனர். ஆனால், ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடும் திட்டத்தில் தவெக அரசு உள்ளதாகவும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்கும் யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, கடந்த திமுக ஆட்சிக் காலத்தின்போது பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் தவெக தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய். எப்போதும் இந்த திட்டத்திற்கு எதிராக இருப்பேன் எனவும் தெரிவித்தார். அந்த வகையில் தவெக அரசு பரந்தூர் விமான நிலையை திட்டத்தைக் கைவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை தவெக அரசு சென்னைக்கான இரண்டாவது விமான நிலைய திட்டமான பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிட்டால், அது நீண்டகால நோக்கில் பார்க்கையில் தமிழ்நாட்டின் பொருளாதார, தொழில், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்துகளை பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகிறார்கள்.

சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிலை: தற்போதுள்ள சென்னை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக இருந்தாலும் அது மற்ற பெருநகரங்களில் உள்ள விமான நிலையங்களை ஒப்பிடுகையில் மோசமான தரத்தில் உள்ளதாகப் பயணிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். மேலும், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது சென்னை விமான நிலையம் மிகச் சிறியதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், சென்னை நகரம் வளர்ந்து வருவதன் காரணமாக இதற்குமேல் அந்த விமான நிலையத்தை விரிவுபடுத்த முடியாத நிலையை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், உள்கட்டமைப்பு ரீதியாகும் நவீனமாக இல்லாமல் உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் தேர்வாக இந்த விமான நிலையம் இருப்பதில்லை எனவும் கூறுகிறார்கள்.

இப்போது சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச விமானம் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு, சுமார் 420 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 57,856 ஆக இருக்கிறது. ஆனால், கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பயணிகள் வருகை நாள் ஒன்றுக்கு சராசரியாக 62,586 ஆக இருந்தது. நடப்பாண்டில் கடந்த ஏப்ரலில் இது குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி சென்னை விமான நிலையம் கடந்த 3 ஆண்டுகளாக டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா என்று தரவரிசை பட்டியலில், 3வது இடத்தை பிடித்தது. தென்னிந்தியாவில் பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்களை பின்தள்ளி, முதல் இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது சென்னை விமான நிலையம் பயணிகள் எண்ணிக்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில், இந்திய அளவில் 3வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டு ஏப்ரலில் டெல்லி விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,21,734 பயணிகளும், மும்பை விமான நிலையத்தில் 1,34,900 பயணிகளும், பெங்களூரு விமான நிலையத்தில் 1,22,835 பயணிகளும், ஐதராபாத் விமான நிலையத்தில் 74,960 பயணிகளும், கொல்கத்தா விமான நிலையத்தில் 58,834 பயணிகளும் பயணித்துள்ளனர். ஆனால் சென்னை விமான நிலையத்தில் சராசரியாக 57,856 பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். இந்த ஆண்டு பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததோடு 6ம் இடத்திற்கு பின் தங்கி உள்ளது.

லக்கேஜ்கள் வருவதற்கு மணிக்கணக்கில் தாமதமாதல், பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை சென்னை விமான நிலையத்தில் ஏற்படுகிறது. அதேபோல் விமான நிலையத்தை விட்டு வெளியில் வரும் பயணிகள் உடனடியாக வாகனங்களில் ஏறி வீடுகளுக்கு செல்ல முடியாமல், மல்டி லெவல் கார் பார்க்கிங் 4 மாடியில் ஏறி, லிப்ட்களுக்கு நீண்ட நேரம் காத்திருந்து ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற அவலநிலை இந்தியாவில் எந்த விமான நிலையத்திலும் இல்லை என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர். அதோடு விமான வருகை, புறப்பாடு, தாமதம், ரத்து குறித்த தகவல்கள் பயணிகளுக்கு முறையாக தெரியப்படுத்துவது கிடையாது. மேலும், இந்த விமான நிலையம் தற்காலத்திற்கேற்ப நவீன தன்மையுடன் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான பயணிகள் தங்களுடைய சர்வதேச விமானப் பயணங்களுக்கு சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தாமல், பெங்களூரு, ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்த திட்டத்தால் தொழில்துறை மட்டுமல்லாமல் சிறந்த வான்வழிப் போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் இருந்தால் உலகின் சுற்றுலா மையமாகவும் தமிழகம் திகழவும் வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கு கனவு நிறைவேற இன்னும் தாமதமாகும் என்றும் அதை நோக்கிய வேகத்தை மட்டுப்படுத்தும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். காரணம், போதுமான வான்வழிப் போக்குவரத்தும், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் போகும்பட்சத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் வேறு மாநிலங்களை நோக்கி நகரும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, ஒன்றிய பாஜ அரசு தமிழகத்திற்கு வரும் தொழில் முதலீடுகளை பாஜ ஆளும் மாநிலங்களுக்கு திசை திருப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதுபோன்ற நிலையில் ஒருவேளை பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டால் மேற்கண்ட திட்டங்களும் இல்லாமல் போகும். அதனால், சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களின் தொழில் துறை வளர்ச்சி தடைபடுவது மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பு இழப்புகளும் ஏற்படும் என எச்சரிக்கின்றனர். மேலும், தவெக அரசின் அலட்சியத்தால் ஏற்கனவே தமிழகத்தில் முதலீடு செய்யவிருந்த பல ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழகத்தைவிட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் மேம்போக்காக பரந்தூர் திட்டத்தை அணுகி அதை புறந்தள்ளாமல், எதிர்காலத்தை, தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

முதல்வரிடம் விரைவில் அறிக்கை

இந்தச் சூழலில், பரந்தூர் விமான நிலையம் ஏன் தேவை என விளக்கும் விமான நிலைய ஆணையம் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து, விமான நிலைய ஆணையம் ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையை விரைவில் முதல்வர் விஜய்யிடம் அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் என்பது காலத்தின் கட்டாயம். அதற்காகவே பரந்தூர் விமான நிலையம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்க முடியும். அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான நில அமைப்பியல், சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் போக்குவரத்து இணைப்பு குறித்த ஆய்வுகள் அனைத்தையும் முடித்து அறிக்கை தயாரித்துள்ளதாகவும், விமான நிலையத்தைச் சுற்றி உருவாக உள்ள ஏரோட்ரோபோலிஸ் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அந்த அறிக்கையை முதல்வர் விஜய்யிடம் வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பயணிகள், சரக்குகளை கையாளும் திறன்

தற்போது சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு சற்றேறக்குறைய 2.2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகளை கையாள்கிறது என புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவருகிறது. இந்நிலை தொடர்ந்தால் அதிகபட்சம் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் பயணிகளின் எண்ணிக்கை, இந்த விமான நிலையத்தின் அதிகபட்ச கையாளும் திறனான 3 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அந்த எண்ணிக்கையை எட்டிய பிறகு திட்டமிட்டு 2வது விமான நிலையம் அமைப்பதற்குள் தமிழகத்தின் வளர்ச்சி ஏராளமான பாதிப்புகளைச் சந்திக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டால் வளர்ச்சி கனவாகவே போய்விடும்: பாதிப்புகள் என்னென்ன?

  • இந்த திட்டத்தை சாதாரணமான விமான நிலைய திட்டம் என்ற குறுகிய பார்வையுடன் மட்டும் அணுக முடியாது. அதனைச் சுற்றித் திட்டமிட்டு இருந்த சுமார் ரூ.50,000 கோடிக்கும் அதிகமான மிகப்பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களையும், 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் என தமிழ்நாட்டின் அடுத்தகட்ட நகர்வைச் சிதைக்கும் ஒன்றாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. இத்தகைய விமான நிலையம் கைவிடப்படும் பட்சத்தில், அதனைச் சார்ந்து வரவிருந்த பல்லாயிரம் கோடி மதிப்பிலான தனியார் முதலீடுகளும், உலகளாவிய விநியோகச் சங்கிலி உள்ளிட்ட உள்கட்டமைப்புகளையும் தமிழ்நாடு இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பரந்தூர் திட்டத்தை மையமாகக் கொண்டு சென்னைக்கு மேற்கே பிரமாண்டமான பொருளாதார மற்றும் தொழில்துறை வழித்தடத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படுவதால் அந்த திட்டமும் இல்லாமல்போகும் சூழல் உள்ளது.
  • பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை 52.94 கிலோமீட்டர் தூரத்துக்கு சுமார் 20 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இரண்டு கட்டங்களாக மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த வழித்தடத்தில் முதல் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரையிலான 27.9 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.8779 கோடி மதிப்பில் திட்டம் நிறைவேற்ற திமுக தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், தற்போது சென்னையையும் அதன் மேற்கு தொழில் மண்டலங்களையும் இணைக்க இருந்த அதிவேக மெட்ரோ கனவு திட்டமும் முழுமையாகக் கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் போக்குவரத்து உள்கட்டமைப்பில் சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்கள் பின்தங்கும் என தெரிவிகின்றனர்.
  • பரந்தூரை வான்வழிச் சரக்குப் போக்குவரத்தின் மிகமுக்கியமான மையமாக மாற்றத் திட்டமிடப்பட்டது. அதற்காகச் சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை திட்டத்தில் பரந்தூர் நேரடியாக இணைக்கப்பட இருந்தது. இதுமட்டுமன்றி, சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இடையே திட்டமிடப்பட்டுள்ள அதிவேக ரயில் வழித்தடத்தில் பரந்தூர் ஒரு முக்கிய நிறுத்தமாக அமையவிருந்தது. மேலும், பல்வேறு நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட இருந்தது. இதன்மூலம் தமிழகத்தின் சாலை கட்டமைப்பு உலகத் தரத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது இவையும் கை நழுவும் சூழல் ஏற்பட்டுள்ளது
  • ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டைகளை உள்ளடக்கிய தமிழகத்தின் மிகப்பெரிய உற்பத்தி மையத்தை மெட்ரோ, விரைவுச்சாலை மற்றும் சென்னை வெளிவட்டச் சாலை ஆகியவற்றின் மூலம் பரந்தூர் விமான நிலையத்துடன் இணைத்தால் அது தமிழகத்தைத் தொழில் வளர்ச்சியில் முன்னோக்கிச் செலுத்தும் ஒன்றாக இருக்கும் என தொழில்துறை வல்லுநர்கள் கருதினர். மேலும், கிடங்குகள், மின்னணு சாதன தயாரிப்பு, விண்வெளி உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடுகளும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த உள்கட்டமைப்புச் சங்கிலி உடைந்தால், சென்னைக்கு மேற்கே அமையவிருந்த இந்தியாவின் அடுத்த மாபெரும் பொருளாதார வழித்தடம் தொடக்கத்திலேயே முடங்கிப்போகும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

பரந்தூர் விமான நிலையத்துக்கான திமுக அரசின் நடவடிக்கைகள்

2021 திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை நகரின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு 2வது விமான நிலையத் திட்டத்தை மீளாய்வு செய்யத் தொடங்கியது.

2023 விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. நில அளவீடு, கிராம எல்லை வரையறை மற்றும் பாதிக்கப்படும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டன. நில உரிமையாளர்கள், பொதுமக்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

2024 நிலம் கையகப்படுத்தும் பணிகள் வேகப்படுத்தப்பட்டன. இழப்பீடு மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் குறித்து அரசு அறிவிப்புகள் வெளியிட்டது.

2025 ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் தொடங்கப்பட்டன.

2026 ஜனவரி சுமார் 1,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டன. 13 கிராமங்களை உள்ளடக்கிய சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வு இறுதிக்கட்டத்தை எட்டியது. பாதிக்கப்படும் குடும்பங்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

2026 மார்ச் பரந்தூர் விமான நிலையத் திட்டம், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்டத்தின் கீழ்சி றப்புத் திட்டம் என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நில ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக அனுமதிகள் விரைவுபடுத்தப்பட்டன.

2026 தற்போதைய நிலை: திட்ட மதிப்பு சுமார் ₹27,000 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.