Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் லைப் ஜாக்கெட் அணியாமல் பரிசல் பயணம்

*மாவட்ட நிர்வாகத்தின் கனமழை அறிவிப்பை கண்டு கொள்ளாத வனத்துறை

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியான பரளிக்காடு பகுதியில் வனப்பகுதிக்கு நடுவே அணையின் நீர்த்தேக்க பகுதியில் பரிசலில் பயணம் செய்வதற்காகவே ஏராளமானோர் வருகின்றனர்.

வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பண்டிகைகால விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டு வரும் இந்த சூழல் சுற்றுலா நேற்று கோவை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்தும் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பங்கேற்று பரிசல் பயணம் மேற்கொண்டனர். பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் இறங்கி குளித்தும் மகிழ்ந்தனர்.

மேலும், பரிசலில் பயணிப்போர் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும் என்ற விதிகளுக்கு புறம்பாக லைப் ஜாக்கெட் அணியாமல் பல சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையில் நனைந்தபடியும், குடையை பிடித்தபடியும் அணைக்கு தண்ணீர் வரும் சுமார் 50 அடி ஆழ நீர் தேக்க பகுதியில் பரிசலில் சென்றனர்.கோவை கலெக்டர் பவன்குமார் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை எடுத்து வருகிறார். பேரிடர் மீட்பு படையினரும் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வரும் நிலையில் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கை அறிவிப்பை கண்டு கொள்ளாமல் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து காரமடை வனச்சரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது ஏற்கனவே முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகளுக்காக சூழல் சுற்றுலா நடத்தப்பட்டது. கனமழை எச்சரிக்கை காரணமாக பரளிக்காடு மற்றும் கூச்சமரத்தூர் சூழல் சுற்றுலாவிற்கு இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.