Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பப்பாளியில் தொடர் வருமானம்...விபரமான முறைகளைக் கையாளும் விருதுநகர் விவசாயி!

பப்பாளியில் தொடர் வருமானம் பெறும் ``3 ஏக்கர்ல பப்பாளி மரங்களை வளர்க்கறோம். 6 வருஷமா இந்த பப்பாளி சாகுபடியை தொடர்ச்சியா செய்றோம். ரெகுலரா ஒருநாள் விட்டு ஒருநாள் வருவாய் கிடைக்கற மாதிரி விவசாயம் பண்ணணும்ன்றதுக்காகவே இந்த பப்பாளி சாகுபடியை தேர்ந்தெடுத்தேன்” எனத் பேசத்தொடங்கினார் சரவணகுமார். டிப்ளமோ டீசல் மெக்கானிக் படித்த இவர் விருதுநகர் மாவட்டம் பாம்பாட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர் பப்பாளி சாகுபடியில் தொடர்ச்சியாக வருமானம் பார்த்து வருகிறார். இவரது விவசாய முறை குறித்து அறிந்துகொள்ள பனித்துளிகள் அகலாத ஓர் அதிகாலை வேளையில் பாம்பாட்டி கிராமத்திற்கு பயணமானோம். தோட்டத்தில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த சரவணகுமார், நம்மைக் கண்டதும் வரவேற்று வயலைச் சுற்றிக் காண்பித்தபடியே பேச்சைத் தொடங்கினார். அப்போது அவரிடம், பப்பாளியைத் தேர்ந்தெடுக்கக் என்ன காரணம்? என்றும், அவர் தேர்ந்தெடுத்துள்ள ரகம் குறித்தும் கேட்டோம்.

“இந்த நிலம் நம்ம அம்மாங்ககிட்டதான் இருந்தது. அவங்க சோளம், துவரை, பாசிப்பயறு, உளுந்துன்னு இங்க என்ன விளையுதோ அதெல்லாம் பண்ணாங்க. எல்லா விவசாயிங்களும் பயிரிட்டதையே பண்ணதால பெரிய லாபம் இல்ல. இங்க காட்டுப்பன்றி, மான் தொந்தரவெல்லாம் இருக்கு. பப்பாளிக்கு அதாலலாம் பாதிப்பு வராது. பப்பாளிக்கு பெருசா உடலுழைப்பும் தேவைப்படாது. நாம ரெட்லேடி, 500ன்னு ரெண்டு வெரைட்டியும் பண்றோம். நாங்க ரெட்லேடி ரகத்தை கன்றா வாங்கி வந்து வச்சோம். ரெட்லேடி விளைச்சல் நல்லா இருக்கு. இதுல பூச்சித் தாக்குதலும் ரொம்ப குறைவு. கன்று வைக்கறதுக்கு முன்னாடி, நிலத்தை ரெண்டு மூனு தடவை உழவு ஓட்டிடணும். ஏக்கருக்கு 2 டிப்பர் இயற்கை உரம் போடணும். தலா ஒரு அடி ஆழம், அகலம், நீளம் வச்சி குழி எடுத்து, அதுல வேர்ப்பூச்சி தாக்குதல் வராம இருக்க வேப்பம் புண்ணாக்கு போட்டு சூடாமோனஸ் போட்டு, அப்புறம் கன்று வைக்கணும். ஒவ்வொரு கன்றுக்கும் நடுவுல 5 அடி இடைவெளி இருக்கணும். ஏக்கருக்கு எழுநூறு கன்று நடலாம். வீரிய ஒட்டு ரகம்ன்றதால எந்தக் காலத்துலயும் நடலாம்” என்றவர், மேலும் தொடர்ந்தார்.

“இயற்கை முறைல பண்றதால மண்புழு உரம், மாட்டுச்சாணம் மட்டும்தான் போடுறோம். 22 நாளைக்கு ஒருதடவ உரம் போடுறோம். உரம் போட்டதும் தண்ணி பாய்ச்சணும். மாசத்துக்கு 2லர்ந்து 3 அடி உயரம் வளரும். இதுல எல்லாமே ஆண் மரம்தான். பூ வைக்கறப்ப பஞ்சகவ்யா, மீன் அமிலம் தெளிக்கணும். அப்படி தெளிக்கறப்ப பூ விழாம காய் புடிச்சிடும்” என்றவர், நில பராமரிப்பு, பருவநிலை, பூச்சிகளின் தாக்குதல் பற்றியும் பேசினார். “நிலத்தை 50 சென்ட், 50 சென்ட்டா பிரிச்சிருக்கோம். ஒரு பகுதியில உழவு ஓட்டி ரெடியா வச்சிருப்போம். இன்னொரு பகுதியில பூ ஸ்டேஜ்ல இருக்கும். அடுத்ததுல பழம் பழுத்துக்கிட்டு இருக்கும். இப்படி வளர்க்கறதால சுழற்சி முறையில எப்பவும் பழம் கிடைக்குது. வாய்க்கால் பாசனத்துலதான் தண்ணி பாய்ச்சறோம். எடத்தை ரோட்டரி போட்டு சமதளமா வச்சிருக்கோம். மேடு பள்ளம்லாம் இருக்காது. தண்ணி சமமா எல்லா எடத்துக்கும் பாயும். மழைக்காலத்துல தண்ணி பாய்ச்சமாட்டோம்.

மத்த நேரத்துல 15 நாளைக்கு ஒருதடவ தண்ணி பாய்ச்சினா போதும். மழைக்காலத்துல களை வரும் ரொட்டாவேட்டர் வச்சி களை எடுத்துடுவோம். அதேமாதிரி மழைக்காலத்துல இலை ஈ, மாவுப்பூச்சி ( அசுவினி பூச்சி) தொல்லை இருக்கும். மீன் அமிலம் பஞ்சகவ்யாவை மரத்து மேல ஸ்ப்ரே பண்ணும்போதே இந்தப் பூச்சிலாம் கீழ விழுந்து அழிஞ்சிடும். பழத்தை முக்கா பழத்துல பறிச்சிடணும். அதுலர்ந்து ஒரு நாள்ல பழமாயிடும். பழத்தை நின்னுக்கிட்டே பறிக்கலாம். வாழை, முருங்கை மரத்தோடலாம் ஒப்பிடும்போது, பப்பாளி மரம் மழையையும் காற்றையும் நல்லாவே தாக்குப்பிடிக்கும். உயரம் ரொம்ப அதிகமானா ரெண்டு வருஷத்துல பழம் விளைச்சல் குறைஞ்சிடும். மரத்தை வெட்டிடுவோம்” என்று கூறும் சரவணகுமார், தான் சாகுபடி செய்யும் பப்பாளியில் இருந்து தரமான விதைகளை எடுத்து மற்ற விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறார். விதைகளில் இருந்து கன்றுகளை உற்பத்தி செய்தும் விற்பனை செய்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நல்ல திரட்சியான பழமா பாத்து விதை எடுக்கணும். பழத்தை குலுக்கிப் பாத்தா விதை நெறய இருக்குறது தெரியும்.

அந்தப் பழத்தை வெட்டி விதைகளை எடுத்து சாம்பல் தடவி, ஈரப்பசை குறையுற அளவுக்கு கொஞ்ச நேரம் நிழல்ல காய வைக்கணும். குழித்தட்டுல விதையையும் தேங்காய் நார், மண்புழு உரத்தையும் சூடோமோனசையும் போட்டு 35 நாள்ல கன்றா எடுத்து விக்கறோம் “ என்றார். விற்பனையை பற்றி கூறுகையில், ``பக்கத்துல இருக்குற உள்ளூர் மார்க்கெட்லயே ரெகுலரா குடுக்கறோம். பழமண்டி மொத்த வியாபாரிங்க, கடைக்காரங்க எல்லாருக்கும் குடுக்கறோம். கடைக்காரங்க வழியா தொடர்பு, விற்பனை பிடிக்க 6 மாசம் ஆச்சு. வெயில் காலத்துல பப்பாளி கிலோ 16 ரூபாய்க்கு போகும். சில மாசங்கள்ல கிலோ 12 ரூபாய்க்கு போகும். ஒரு பழம் 3லர்ந்து 4 கிலோ எடை வருது. கடைக்கு போடவே டிமாண்ட் அதிகமா இருக்கு. நம்ம கிட்ட நாட்டு மாடுகளும் இருக்கு. சிந்து ரகம் 7 மாடு இருக்கு. அதோட சாணத்தை வச்சி நாமளே மண்புழு உரம் உற்பத்தி பண்ணிக்கறோம். விதைகளை 20 விதை இருக்குற பாக்கெட் 20 ரூபாய்க்கு குடுக்கறோம். ஒரு பப்பாளிக் கன்றை 20 ரூபாய்க்கு விக்கறோம். தமிழ்நாடு பூரா கேக்குற வாடிக்கையாளர்களுக்கு கூரியர்ல அனுப்பறோம். வேலைகளை நானும் மனைவியுமே பாத்துக்கறோம். அதனால இடுபொருள், ஆள்கூலி செலவு குறைவு. பப்பாளி பழம், விதை, கன்று எல்லாம் சேர்த்து, செலவு போக மாசத்துக்கு சராசரியா

50 ஆயிரம் ரூபாய் நிக்கும்” என நிறைவாகக் கூறினார் சரவணகுமார்.

தொடர்புக்கு:

சரவணகுமார்: 99949 64714.

பழக்கரைசல்

பப்பாளி சாகுபடிக்கு பழக் கரைசல் நல்ல ஊட்டம் தரும். இதை தயாரிக்க பப்பாளி, வாழைப்பழம் போன்ற பழங்களை நன்கு பழுத்த நிலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனோடு நாட்டுச்சர்க்கரையை சேர்க்கவேண்டும். இவற்றை ஒரு “பேரல்”லில் போட்டு காற்றுப் புகாதபடி மூடி வைக்க வேண்டும். பேரலில் நீர் சேர்க்கக்கூடாது. கன்றுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பழங்கள் மற்றும் சர்க்கரையின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். பப்பாளி கன்றை நடுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இந்த பழக்கரைசலை ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த 48 நாட்களுக்குப் பிறகு இதைத் திறக்க வேண்டும். இது பஞ்சாமிர்தம் போல் ஆகியிருக்கும். இந்த பழக்கரைசலை இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் பழக்கரைசலை 4 லிட்டர் தண்ணீரோடு கலந்து தயார் செய்துகொள்ள வேண்டும். இந்த பழக்கரைசல் திரவத்தை, பப்பாளிக்கன்றின் வேர் தூரில், செடிக்கு 50 முதல் 10 மில்லி லிட்டர் வரை ஊற்றவேண்டும். கன்று 35 முதல் 40 நாட்கள் வளர்ந்த நிலையில் இதை ஊற்றவேண்டும். இந்த பழக்கரைசல் கொடுக்கும் சத்தால், பப்பாளி மரமாகும்போது பூ மற்றும் பிஞ்சு அதிகமாகவும், செழிப்பாகவும் வரும்.