கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முந்திரி விவசாயிகளிடம் ரூ.1 கோடி மோசடி: இளம்பெண் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முந்திரி விவசாயிகளிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக இளம்பெண் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. பண்ருட்டி அடுத்துள்ள சாத்திப்பட்டு பகுதியை சேர்ந்த வினோலியா என்ற இளம் பெண் முந்திரி ஏற்றுமதி செய்து வந்துள்ளார். இதற்காக அவர் விவசாயிகளிடம், ஏராளமானோரிடம் டன் கணக்கில் முந்திரியை கொள்முதல் செய்த நிலையில் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் வினோலியா தலைமறைவான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் விவசாயிகள் புகார் அளித்தனர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்த வினோலியாவை பாதிக்கப்பட்ட விவசாயிகள்,வியாபாரிகள் சிறை பிடித்தனர். முந்திரி கொள்முதல் செய்துவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


