Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாற்றுப்பயிராக மணம் வீசும் பன்னீர் ரோஸ்!

வேலூர் அடுத்த அணைக்கட்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது அப்புக்கல் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிறு கிராமம்தான் மானியக்கொல்லை. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நெல்லும் காய்கறி பயிர்களும்தான் அதிகளவில் சாகுபடி செய்யப் படுகின்றன. அன்பரசன் என்ற விவசாயி மட்டுமே இந்தப் பயிர்களுக்கு மாற்றாக மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாகப் பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ் சாகுபடியை மிக நேர்த்தியாக செய்து வருகிறார். மணம் வீசும் அவரது மலர்த் தோட்டத்திற்கு ஒரு காலைப்பொழுதில் சென்றோம்.

``அணைக்கட்டு தாலுகாவில் புலிமேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகளவில் மலர் சாகுபடி நடக்கிறது. அப்புக்கல் மலையடிவாரத்தில் உள்ள எங்கள் பகுதியில் நெல் மற்றும் காய்கறி பயிர்கள் மட்டுமே அதிகளலில் பயிர் செய்யப்படுகிறது. மழை, புயல் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் நெல் பயிரிடும் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை உருவாகும். இதுபோல் பல பாதிப்புகள் இருந்து வரும் நிலையில், இந்தப் பகுதியில் மலர் சாகுபடியில் இறங்கலாம் என முடிவெடுத்தேன். இதுகுறித்து பலரிடம் ஆலோசனை கேட்டேன். அவர்கள் மலர் சாகுபடி நல்ல பலன் தரும் என நம்பிக்கை தெரிவித்தனர். அதிலும் சிலர் பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ் நம் பகுதிக்கு நன்றாக வரும் என்று கூறியதால் அதைப் பயிரிடலாம் என முடிவெடுத்தேன்’’ என மலர் சாகுபடிக்கு வந்த கதையோடு நம்மிடம் பேசத்தொடங்கிய அன்பரசன், சாகுபடி விவரங்களையும் அடுக்க ஆரம்பித்தார்.

``கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் இருந்து 3500 பன்னீர் ரோஸ் மற்றும் பட்டன் ரோஸ் செடிகளை ரூ.20 வீதம் வாங்கிவந்தேன். அவற்றை ஒன்றரை ஏக்கர் நிலத்தில் இரண்டு அடிக்கு ஒரு செடி என நடவு செய்தேன். சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஏக்கரில் பன்னீர் ரோசும், அரை ஏக்கரில் பட்டன் ரோசும் நடவு செய்தேன். இந்த நிலத்தை ஆனந்தன் என்பவரிடம் குத்தகை முறையில் எடுத்து பயிர் செய்கிறேன். கோழி எரு, மாட்டுச்சாணம் மற்றும் யூரியா உரத்தை செடிகளின் வளர்ச்சிக்காக இடுகிறேன். சொட்டுநீர் மூலம் பாசனம் செய்வதால் தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படுகிறது. செடிகளும் நன்றாக வளர்ந்து பூக்கள் தருகின்றன. தினமும் காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் பூக்களை அறுவடை செய்கிறோம். அறுவடை செய்த பூக்களை டிரேவில் வைத்து பாதுகாத்து, மறுநாள் அதிகாலையில் வேலூர் பூ மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கிறேன். நல்ல விளைச்சல் இருக்கும் சமயத்தில் 20 கிலோவில் இருந்து 50 கிலோ வரை அறுவடை செய்வோம். விளைச்சல் குறைவாக இருக்கும் சமயங்களில் 30 கிலோ வரை அறுவடை செய்வோம். ஒருமுறை இந்தச் செடிகளை நட்டு விட்டால் தொடர்ந்து மூன்று, நான்கு ஆண்டுகள் வரை பூக்கள் வரத்து நன்றாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை உரமிட்டு பராமரித்தால் போதும். பூக்கள் வராத சமயத்தில் செடியின் இலைகளை முறையாக வெட்டி கவாத்து செய்வோம்.

சீசன் இல்லாத சமயங்களில் விலை குறைவாகவே கிடைக்கும். முகூர்த்த நாள், திருவிழா போன்ற சீசன் சமயங்களில் அதிக விலை கிடைக்கும். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 15 கிலோ பூக்களை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக எடுத்து செல்வோம். இதன்மூலம் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.50 லிருந்து 70 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. தொடர்ந்து பூக்கள் விளைச்சல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதிக லாபம் கிடைக்கும். அணைக்கட்டைச் சுற்றியுள்ள பகுதி களில் மலர் விவசாயம் மிகவும் குறைவு. இதைக் கருத்தில் கொண்டு எங்கள் பகுதியில் பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ் சாகுபடியில் இறங்கினேன். இதனால் இங்கிருந்து குறைவான அளவிலேயே இந்தப் பூக்கள் மார்க்கெட்டுக்கு செல்கின்றன. குறைவான பூக்கள் செல்வதால் இந்தப் பூக்களுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பும் இருக்கிறது’’ என மகிழ்வுடன் கூறுகிறார்.

தொடர்புக்கு:

ச.அன்பரசன்: 97515 23072.

பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ் பூக்கள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளிலும், கோயில் பூஜைகளிலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பெண்களும் இதை விரும்பி வாங்கி சூடிக்கொள்கிறார்கள். இதனால் மார்க்கெட்டில் எப்போதும் தேவை இருக்கிறது என்கிறார் விவசாயி அன்பரசன்.