Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊராட்சி தலைவரே ஜோராக மண் கடத்தும் மோசடியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஏரி மண்ணை தினந்தோறும் கடத்தும் இலைக்கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரு மேல புகார் கொடுத்தாலும் நடவடிக்கையில்லையாமே..’’ என ஆதங்கத்தோடு கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் வாசி ஒன்றியத்துல, கை என்று முடியுற ஒரு ஊராட்சி இருக்குது.. இந்த ஊர் ஆட்சியோட மன்ற பிரசிடெண்ட்டாக இலைக்கட்சிய சேர்ந்தவரு இருக்குறாரு.. இவரு செங்கல் சூளையும் பெரிய அளவுல நடத்தி வர்றாராம்..

அந்த சூளையில செங்கல் தயாரிக்க, அந்த ஊர் ஏரியில இருந்துதான் தினமும் மண் கடத்தி, சூளைய நடத்திக்கட்டு இருக்கிறாராம்.. அந்த தாலுகா வருவாய்த்துறையினருக்கு புகார் கொடுத்தும் கண்டுகாள்ளவே இல்லையாம்.. இப்படி எந்த தடையும் இல்லாம, அந்த ஏரியா, ஏரியில தினமும் மண் கடத்தல் ஜோரா நடக்குதாம்.. இப்படி தடையில்லாம நடக்குற கனிமக்கொள்ைளய கட்டுப்படுத்தலன்னா, ஏரியே காணாமல் போய்டும் போல இருக்குதேன்னு அந்த ஏரியா ஜனங்க புகார் சொல்றாங்க..

இதனால, மாவட்ட உயர் அதிகாரிங்க மண் கடத்துறவங்க மேலயும், கடத்தலுக்கு துணை போறவங்க மேலயும் நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை வெச்சிருக்குறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘திறந்த வேகத்துல காலி பானை கூட இல்லாம தாமரை கட்சியோட நீர்மோர் பந்தல் காட்சியளிக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை, எப்போதுமே தாமரை கட்சிக்கு தான் நடக்குதாம்..

கோடைகாலத்தில் பப்ளிக் பயன்பெறும் வகையில், நீர்மோர் பந்தல் திறப்பது பிரதான கட்சிகளிடம் தொடரும் வழக்கமா இருக்குது.. இந்த கோடையிலும் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், நீர்மோர் பந்தல் திறந்து பொதுமக்களின் தாகம் தணித்து வர்றாங்க.. தேசிய கட்சியான தாமரையும் பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் திறந்திருக்கு.. ஆனால், எல்லா இடத்திலும் பந்தல்மட்டும் தான் இருக்குதாம்.. நீர்மோர் இல்லை என்று கலகலப்பூட்டுகிறது பப்ளிக்..

இப்படித்தான் முட்டை மாவட்டத்தில், நெய்க்கு பேமசான ஊரில் பயங்கர பில்டப்புடன் நீர்மோர் பந்தல் திறந்தாங்களாம் தாமரை பார்ட்டி நிர்வாகிங்க.. இதில் மாநில நிர்வாகிங்க சிலரும் கலந்துகிட்டு, நீர்மோர் பந்தலை திறந்து வச்சாங்களாம்.. திறந்த அரைமணி நேரத்திற்கு பிறகு, இப்போது வரை வெறும் பந்தல் மட்டும்தான் இருக்காம்.. அது சரி, காலி பானையாவது இருக்கணுமே என்றால் அதுவும் இல்லையாம்.. இதப்பத்தி நிர்வாகி ஒருத்தரிடம் கேட்டால், நாங்க நீர்மோர் பந்தல் திறந்த மறுநாளில் இருந்து மழை வந்திருச்சு..

அதனால தாங்க அதை கண்டுக்காம இருக்கோம்னு விளக்குறாராம்.. அவ்ளோ பெருசாவா மழை பெய்யுதுனு நடிகர் என்னத்த கன்னையா பாணியில் கேட்டு கலாய்க்கிறாங்களாம் ஆபோசிட் பார்ட்டிங்க.. என்றார் விக்கியானந்தா. ‘‘மாறுதல் செய்யப்பட்டும் விட்டமின் ‘ப’வை எதிர்பார்த்து தவம் கிடக்கும் புதுமையான அதிகாரி கதை தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் கடந்தாண்டு பவர்புல் அதிகாரியாக வலம் வந்த வல்லமையானவர் பல அதிரடியான நடவடிக்கைகளை தான் வகித்த துறையில் எடுத்தாரு..

இதன் பலனை அனுபவிக்க காத்திருந்த நிலையில் ஜனவரியில் தடாலடியாக வடமாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுட்டாரு.. மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி போன்ற துறைகளில் ஆளுமைமிக்க வல்லவராக திகழ்ந்தபோது விட்டமின் ‘ப’ வை எதிர்பார்த்து பலருக்கு இடமாற்றம் செய்து கொடுத்தாராம்.. அவரது இடமாற்றம் அவரால் பலனை அனுபவித்தவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்காம்.. இருந்தாலும் இடமாறுதல் சோகத்தில் மூழ்கிய பவுர்புல் அதிகாரி, பெயளரவில் மாறுதல் வழங்கப்பட்ட பகுதிக்கு சென்று கையெழுத்து போட்டுவிட்டு நீண்ட விடுப்பில் மீண்டும் சேரியிலேயே முகாமிட்டு ஓய்வெடுத்து வருகிறாராம்..

தனது கையெழுத்து மூலம் இடமாறுதல், பதவி உயர்வு, டெண்டர் பெற்று பயனடைந்தவர்களிடம் இருந்து வரவேண்டிய ‘விட்டமின்- ப’ எப்போது வரும்னு தவம் கிடப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் இந்த புதுமையான அதிகாரிபற்றியே பரவலாக பேச்சு ஓடுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தல் முடிஞ்சதும் சென்னைக்கு பறந்த தாமரைக்கட்சி வேட்பாளர் அவ்வப்போது தொகுதி பக்கம் தலைகாட்டுகிறாரமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வடமாநில நதி பெயரில் முடியும் நாடாளுமன்ற தொகுதியில் தாமரை கட்சியின் சார்பில் கூட்டணி கட்சியை சேர்ந்த தேவமானவர், தாமரை சின்னத்தில் போட்டியிட்டாரு.. தேர்தல் நேரத்தில் தொகுதியில் வந்து தங்கிய தேவமானவர் தொண்டர்களைக் கூட சரியாக சந்திக்கவில்லையாம்.. இதுகுறித்து தாமரை தரப்பும், மற்ற கூட்டணி கட்சியினரும் தலைமைக்கு தகவல் தெரிவிச்சிருக்காங்க.. ஆனால், தாமரை தரப்பு மற்றும் கூட்டணி கட்சியினரோ தேவமானவரிடம் பணத்தை வாங்குவதிலேயே குறியாக இருந்தாங்களாம்..

தேர்தல் பணிக்காக ஒரு சில வாகனங்களை எடுத்து வந்துவிட்டு, பல வாகனங்களை எடுத்து வந்ததாக கணக்கு காட்டி பணத்தை கறந்துட்டாங்களாம்.. கணக்கில் காட்டிய வாகனங்களின் பதிவு எண்களை வேட்பாளர் தரப்பு செக் செய்தபோது கடும் அதிர்ச்சி அடைஞ்சிட்டாங்களாம்.. அந்த பகுதியில் உள்ள டூவீலர்களின் நம்பர்களை எல்லாம் எழுதி கொடுத்துவிட்டு பணத்தை கறந்தது பேரதிர்ச்சியா போச்சாம்.. தேர்தல் முடிந்ததும் சென்னைக்கு பறந்த வேட்பாளர், அவ்வப்போது வந்து தொகுதி பக்கம் தலைகாட்டி வர்றாராம்..

தனக்கு நெருக்கமா இருந்தவர்களுக்கு போனை போட்டு தனக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதா நினைச்சிட்டு பீலா விட்டு வருகிறாராம்.. அவர் கூறும் வாக்கு கணக்கு புரியாமல் சலித்து போனவர்கள், தற்போது வேட்பாளரின் நம்பரை பார்த்தாலே அலறுகின்றனராம்... இப்போ பலர் செல்போன் அழைப்பை எடுப்பதே இல்லையாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.