*ஆபத்தான மரங்களை வெட்ட கோரிக்கை
அருமனை : அருமனை அருகே அண்டுகோடு உத்திரங்கோடு வலியவிளை பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (60). தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அண்டுகோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் மழை பெய்தது.
இதனால் நேற்று காலை பக்கத்து நிலத்தில் இருந்த பலா மரம் ஒன்று பலத்த காற்று காரணமாக முறிந்து விஸ்வநாதனின் வீட்டின் ஒரு பகுதியில் விழுந்தது. கணவன், மனைவி வீட்டின் வேறு பகுதியில் படுத்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனால் அனில் நிலத்தில் நிற்கும் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றகோரி விஸ்வநாதன் தரப்பில் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக அவர் விளவங்கோடு தாசில்தார் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் இடதணிக்கை செய்ய சென்றபோது பலா மரத்தினால் விஸ்வநாதன் வீட்டுக்கு ஆபத்து இல்லை என்றும், அவ்வாறு மரம் விழுந்தால் அதற்கு தாங்களே முழு பொறுப்பு என்றும் அனில் தரப்பில் கூறியாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது 2வது முறையாக விஸ்வநாதன் வீட்டில் பலாமரம் முறிந்து விழுந்துள்ளது.
இதனால் மீண்டும் பக்கத்து நிலத்தில் நிற்கும் மரங்கள் விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதேபோல் அதே பகுதியில் பலத்த காற்றுக்கு வினில் என்பவரது வீட்டின் மீது அயனிமரம் வேரோடு விழுந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்தேசம் தவிர்க்கப்பட்டது.


