பள்ளிக்கரணையில் சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்ட இடைக்கால தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஷ்நேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
எனவே, இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினார். அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.தமிழ் செல்வன், வழக்கை தள்ளிவைக்கும் பட்சத்தில் இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்ற இடைக்கால உத்தரவை டிசம்பர் 2ம் தேதி வரை நீட்டித்த நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
