Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாளையங்கோட்டையில் பராமரிப்பின்றி பொலிவிழந்த மண்டல அலுவலக கட்டிடம்

சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கேடிசி நகர் : பாளையில் பராமரிப்பின்றி பொலிவிழந்து காட்சியளிக்கும் மண்டல அலுவலக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 3 நகராட்சிகளை இணைத்து நெல்லை மாநகராட்சியாக கடந்த 1996ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பாளையில் நகராட்சி அலுவலகம் செயல்பட்ட கட்டிடத்தில், தற்போது மாநகராட்சியின் பாளை.

மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டிடம், மின் விசிறி செயல்படாவிட்டாலும் குளுமையாகவே இருக்கும் என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நூற்றாண்டை கடக்கும் பாளை. மண்டல அலுவலக கட்டிடம், தற்போதும் உறுதியுடன் காணப்படுகிறது. ஆனால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொலிவிழந்து காணப்படுகிறது. சில இடங்களில் அலுவலகத்தின் மேற்பகுதி பூச்சுகள் பெயர்ந்து நிற்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு உதவி வருவாய் அலுவலர் அறையின் மேற்பகுதி பூச்சு உடைந்து விழுந்ததில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதேபோல் மின்சார சுவிட்ச் பாக்சுகளும் பாதுகாப்பின்றி உள்ளன.

மேலும் அலுவலகத்தை சுற்றிலும் பழைய கட்டிட இரும்பு பொருட்கள், கம்பிகள், கழிவு பொருட்கள், தகரம் என பல்வேறு பொருட்கள் ஆக்கிரமித்து குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இது இங்கு வாகனங்களில் வருபவர்களுக்கு இடையூறாக இருப்பதுடன் பாம்பு, பூச்சிகளின் புகலிடமாகவும் மாறியுள்ளன. இதனால் இங்கு பணியாற்றும் ஊழியர்கள், ஒரு வித அச்சத்துடனே பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள கழிவறை, பூங்கா, பல்துறை சேவை மையம் ஆகியவையும் பராமரிப்பின்றியே காணப்படுகிறது. எனவே நூற்றாண்டை கடக்கும் பாளை. மண்டல அலுவலக கட்டிடத்தை பழமை மாறாமல் சீரமைத்து பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘‘நூறாண்டை கடக்கும் கம்பீரமான கட்டிடம்''

மாநகராட்சியின் பாளை. மண்டல அலுவலகமாக செயல்படும், அப்போதைய பாளை நகராட்சி கட்டிடம் கட்டுவதற்கு 1923ம் ஆண்டு பிப்.22ம் தேதி சென்னை மாகாண கவர்னராக இருந்த லார்டு வில்லிங் கூன் அடிக்கல் நாட்டினார். இந்த அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு 1925ம் ஆண்டு அக்.24ல் சென்னை மாகா ண கவர்னர் லார்டு கோசல் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. கட்டக்குத்து மாடலுடன் சுண்ணாம்பு கல் மற்றும் தூண்கள் அமைத்து கட்டப்பட்ட கட்டிடம் இன்றும் கம்பீரமாக காணப்படுகிறது.