Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு: கொள்ளையனுக்கு தர்ம அடி

ஆலந்தூர்: பணி முடிந்து வீட்டிற்கு மின்சார ரயில் மூலம் சென்ற பெண் காவலரிடம் செயின் பறித்த வழிப்பறி கொள்ளையனை, பொதுமக்கள் பிடித்து சரமாரியாக உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பரணி (35). இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.

வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் மூலம் தனது வீட்டிற்கு புறப்பட்டார். பின்னர், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி, நடைமேடையில் நடந்து சென்றபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர், திடீரென பெண் காவலர் பரணியின் கழுத்தில் இடந்த ஒன்றரை சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் காவலர் பரணி, ‘திருடன்.... திருடன்....’ என கூச்சலிட்டார்.

அப்போது நடைமேடையில் இருந்த பொதுமக்கள், அந்த நபரை துரத்தி பிடித்து சரமாரியாக தாக்கினர். பிறகு பெண் காவலர் பரணி சம்பவம் மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ரயில்வே போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து வழிப்பறி கொள்ளையனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சக்திய பாலு (23) என தெரியவந்தது.

இவர், கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரயில்களில், ரயில் நிலையங்களில் தொடர் செயின் பறிப்பு மற்றும் பணம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழிப்பறி கொள்ளையன் சக்திய பாலுவை கைது செய்தனர். அவனிடம் இருந்து செயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.