Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழவந்தாங்கலில் கன்டோன்மென்ட் குப்பை கிடங்கில் தீ: கடும் மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

ஆலந்தூர்: பல்லாவரம் மற்றும் பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதி வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை பழவந்தாங்கல், பி.வி.நகர், நேரு நெடுஞ்சாலையில் உள்ள கன்டோன்மென்ட் போர்டுக்கு சொந்தமான 18 ஏக்கர் பரப்பளவிலான நிலப்பரப்பில் கொட்டி தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழவந்தாங்கலில் உள்ள கன்டோன்மென்ட் குப்பை கிடங்கு நேற்றிரவு திடீரென தீப்பற்றி குப்பைக் கழிவுகள் அனைத்தும் கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன் கரும்புகை சூழ்ந்ததில், அப்பகுதி மக்கள் கடும் மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் பழவந்தாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் ரங்கநாதன் தலைமையில் போலீசாரும் தாம்பரம், அசோக்நகர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி, கன்டோன்மென்ட் குப்பைக் கிடங்கில் பரவியிருந்த தீயை முற்றிலும் அணைத்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.