Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழநி கோயில் நில முறைகேடு வழக்கில் புரோக்கர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

திண்டுக்கல்: பழநி கோயில் நில முறைகேடு வழக்கு தொடர்பாக ஒட்டன்சத்திரத்தில் உள்ள நில புரோக்கர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் கோயில் நிலத்தை வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோருக்கு, விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவர் முறைகேடாக விற்பனை செய்தார். இது தொடர்பான புகாரின்பேரில் பழநி அடிவாரம் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து துறைரீதியான நடவடிக்கையாக நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இது தொடர்பான வழக்கில் பத்திரப்பதிவை ரத்து செய்து, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் உள்ளிட்ட பலரை திண்டுக்கல் அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை செய்தனர். மேலும், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளம் சேர்ந்த வெள்ளத்துரை, பழநி புதூரை சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை, வக்கீல் அன்வர்த்தீன் ஆகியோரை கடந்த 29ம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, முன்ஜாமீன் கோரி புரோக்கர் ஜெயப்பிரகாஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், ஒட்டன்சத்திரத்தில் உள்ள புரோக்கர் ஜெயபிரகாஷ் வீட்டில் இன்று காலை மீண்டும் சிபிசிஐடி ஆய்வாளர் சந்தானலட்சுமி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வீட்டிலுள்ள ஆவணங்களை சரிபார்த்து, ஜெயபிரகாஷின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.