தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான மைக்கேல் ஸ்மித், பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
46 வயதான இவர், டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து அணிகளுக்கான பிரத்யேக பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்ற உள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான பேட்டிங் சரிவை சந்தித்து தோல்வியடைந்ததை அடுத்து, ஒரு முழுநேர பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில் மைக்கேல் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
லெவல் 4 தகுதி பெற்ற பயிற்சியாளரான ஸ்மித், இதற்கு முன்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட், கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் ஆகிய அணிகளுடனும், ஆஸ்திரேலியாவில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் கிரிக்கெட் தாஸ்மேனியா அணிகளுடனும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஆகஸ்ட் 19-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குவதற்கு முன்பு இவர் பாகிஸ்தான் அணியுடன் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.
