Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாகிஸ்தான் அலறல்

தீவிரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் இந்தியாவின் எச்சரிக்கைகளை கொஞ்சம் கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து வாலாட்டி வந்த பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல் அந்த நாட்டையே நிலைகுலைய செய்துவிட்டது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் இந்தியா முதலில் குறி வைத்தது தீவிரவாத குழுக்கள் பதுங்கி இருக்கும் இடங்களைத்தான். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட 21 தீவிரவாத குழுக்களின் முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளின் பட்டியலை இந்திய உளவு அமைப்பான ரா வழங்கியது.

இதில் மிக முக்கியமான 9 முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது.  இந்த நிலையில் இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்க முயற்சித்தது. இவற்றை இந்திய விமானப்படை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது. எஸ் 400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளான சுதர்சன சக்கரம் வழிமறித்து பாகிஸ்தானின் ட்ரோன்களை சுக்கு நூறாக்கியது.

ஒன்றல்ல இரண்டல்ல பாகிஸ்தான் ராணுவம் ஏவிய 500 ட்ரோன்கள், 8 ஏவுகணைகளை நடுவானிலேயே அழித்தது. இந்தியாவின் புதிய வான்வழி வியூகத்தை சமாளிக்க முடியாமல் ஒரே நாளில் பாகிஸ்தான் அலற தொடங்கிவிட்டது. பொதுமக்களை குறி வைக்காமல், தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து துல்லிய தாக்குதலில் ஈடுபட்ட இந்தியா ராணுவத்தின் நடவடிக்கையானது பாகிஸ்தான் மக்களையும் சிந்திக்க வைத்துள்ளதோடு அந்நாட்டு அரசாங்கம் மீது வெறுப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதோடு அல்லாமல் அங்குள்ள சில தீவிரவாத அமைப்புகளும் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட தொடங்கி இருப்பது பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ராணுவத்தின் தாக்குதல் இப்படி ஒரு மோசமான சூழலை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் ராணுவம் நினைத்துகூட பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணைபோகிறது என்று பல ஆண்டுகளாக இந்தியா பகிரங்கமாக புகார் கூறிவருகிறது.

இதற்கான எண்ணற்ற ஆதாரங்களையும் இந்தியா உலக அரங்கில் கொடுத்தபோதிலும் மறுப்பு தெரிவிப்பதை மட்டுமே தனது கடமையாக கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு தற்போது பஹல்காம் தாக்குதல் சம்பவம் மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க தொடங்கி உள்ளது. இந்திய முப்படைகளின் இந்த அதிரடி நடவடிக்கையானது பாகிஸ்தானை நிலைகுலைய வைத்துள்ளது. இந்தியா ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஒரே நாளில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் நாட தொடங்கி உள்ளது.

பயங்கரவாதத்திற்கு துணை போகும் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக எந்த நாடும் ஆதரவு தெரிவிக்க முன்வர வாய்ப்பு இல்லை. எனவே உலக அரங்கில் பாகிஸ்தான் இனி தனித்து விடப்படப்போவது உறுதி. அங்குள்ள கிளர்ச்சியாளர்களின் கைகள் இனி ஓங்கும். இந்தியா விதித்துள்ள பல்வேறு பொருளாதார தடைகளால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும். எந்த தீவிரவாத குழுக்களை பாகிஸ்தான் தனது கவசமாக பயன்படுத்தி இத்தனை ஆண்டுகளாக இந்தியாவிற்கு தீராத தொல்லை கொடுத்து வந்ததோ, அதே தீவிரவாத குழுக்கள் இனி பாகிஸ்தானுக்கு எதிராக மாறும் நிலை ஏற்படும். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.