Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பாகிஸ்தானின் கராச்சியில் 8 ஆண்டுகளில் இல்லாத உச்சகட்ட வெப்பம்.! 10 பேர் பலி

கராச்சி: கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானின் கராச்சி நகரம், தற்போது ஒரு கடுமையான வெப்ப சூழலை சந்தித்து வருகிறது. இயற்கை ஒருபுறம் அனலாக தகிக்க, மறுபுறம் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிக்கும் நிலை கராச்சியில் நெருக்கடியான சூழலை உருவாக்கி உள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நீடித்து வரும் இந்த வெப்பஅலை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் 5 பேரின் சடலங்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், வெப்ப தாக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

EDHI அறக்கட்டளை அளித்துள்ள தகவலின்படி, உயிரிழந்தவர்களில் 7 பேரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தரவுகளின்படி கடந்த திங்கட்கிழமை கராச்சியில் 44.1 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது. இது கடந்த 2018-ஆம் ஆண்டிற்கு பிறகு பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை ஆகும்.

வழக்கமான மே மாத சராசரி வெப்பத்தை விட, இது சுமார் 7.8 டிகிரி அதிகம் ஆகும். நிலப்பகுதியில் இருந்து வீசிய வறண்ட காற்றும், குளிர்ந்த கடல் காற்று வீச தாமதமானதும் வெப்பத்தின் தீவிரத்தை நீண்ட நேரம் நீடிக்க செய்கிறது. இப்படி வெப்பத்தின் கொடுமை ஒருபுறம் இருக்க கராச்சியின் பல பகுதிகளில் நிலவும் 16 மணிநேர மின்வெட்டு மற்றும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை அங்கு முற்றிலுமாக முடக்கி உள்ளது.

குறிப்பாக மின்சாரம் இன்றி தேர்வு அறைகளில் மாணவர்கள் தேர்வெழுதும் அவலமும் காணப்படுகிறது. வெப்பம் மிக கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசு கேட்டு கொண்டுள்ளது. தெற்காசியா முழுவதும் பருவநிலை மாற்றத்தால் இதுபோன்ற அதீத வெப்ப அலைகள் ஏற்படுவது சமீப ஆண்டுகளாக ஒரு தொடர்கதையாகி வருவது குறிப்பித்தக்கது.