டெல்லி: பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இந்தியாவின் சதி இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஐகோர்ட்டுக்கு வெளியே நேற்று மதியம் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், அந்த பகுதியில் இருந்த பலர் சிக்கி கொண்டனர். அவர்களில், 12 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும், போலீசார் உடனடியாக மீட்பு பணிக்கு சென்றனர். இந்த சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாதமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. நேற்று முன்தினம் செங்கோட்டை அருகே கார் வெடித்த நிலையில், நேற்று பாகிஸ்தானின் தற்கொலை தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த தற்கொலை தாக்குதலுக்கு இந்தியாவின் சதி இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தானை அழிப்பதையே நோக்கமாக கொண்டு இந்தியா செயல்படுவதாகவும் அவர் சாடியுள்ளார். ஆனால், பாகிஸ்தான் கூறிவரும் ஆதாரமற்ற கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தானுக்குள் நடந்து கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு சீர்குலைவு மற்றும் அதிகார அபகரிப்பில் இருந்து சொந்த மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்தியாவிற்கு எதிராக தவறான கதைகளை உருவாக்குவதாகவும் ஒன்றிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கும், ஆப்கனிஸ்தானுக்கும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த சில நாட்களுக்குள் இந்த தாக்குதல் நிகழ்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
