பாதி உலகையே அழித்துவிடுவோம் பாக். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது: அமெரிக்காவில் அசிம் முனீரின் அச்சுறுத்தல் பேச்சுக்கு பதிலடி
நியூயார்க்: பாகிஸ்தான் ராணுவ தலைவர் அசிம் முனீர் இரண்டாவது முறையாக ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் புளோரிடாவின் டம்பாவில் உள்ள பாகிஸ்தான் புலம்பெயர்ந்தோரிடையே அசிம் முனீர் உரையாற்றினார். அப்போது பேசிய முனீர், இந்தியா உடனான சமீபத்திய மோதலின்போது பாகிஸ்தான் உறுதியாகவும், வலுவாகவும் பதிலளித்தது. காஷ்மீர் இந்தியாவின் உள் விஷயம் அல்ல” என்றார். மேலும் முனீர் பேசுகையில், சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், நாங்கள் 10 ஏவுகணைகளை வீசி அதை தகர்ப்போம். நாங்கள் வீழ்ச்சியடைகிறோம் என்று நினைத்தால் எங்களுடன் சேர்ந்து பாதி உலகத்தையும் அழிப்போம் என்று கூறினார்.
அமெரிக்க மண்ணில் இருந்து பாகிஸ்தான் ராணுவ தலைவர் அசிம் முனீரின் இந்த அச்சுறுத்தல் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அசிம் முனீரின் இந்த பேச்சானது அணு ஆயுதங்களை கொண்ட பொறுப்பற்ற நாடு பாகிஸ்தான் என்பதை காட்டுகின்றது என்று விமர்சித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது. தேசிய பாதுகாப்பை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுப்போம் என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது. இந்த கருத்துக்கள் நட்பு ரீதியான மூன்றாவது நாட்டின் மண்ணில் இருந்து கூறப்பட்டு இருப்பது வருந்தத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளது.