Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

’’ஓவியம் எனக்கு தியானம் மாதிரி’’ சொல்கிறார் ஓவியர் ஸ்ருதி சிவகுமார்!

இசை, ஓவியம், சிற்பம்… இம்மூன்றும் நுட்பக் கலைகள் என்பர். அதாவது ஃபைன் ஆர்ட்ஸ். காரணம் இதற்கு மனதும், உடலும், ஒரு சேர ஒத்துழைத்தால்தான் படைப்பு நாம் நினைத்தப்படி கிடைக்கும். மேலும் மற்றக் கலைகள் குறிப்பிட்ட காலங்களில் கற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால் இம்மூன்று கலைகள் மட்டும் பிறக்கும் போதே இரத்தத்தில் அந்த ஆர்வமும், திறனும் சேர்ந்தே பிறந்தால்தான் குறிப்பிட்ட மூன்று கலைகளில் கோலோச்ச முடியும். அப்படி தன் கைகளால் வண்ணமயமான படைப்புகளை தீட்டுகிறார் ஸ்ருதி சிவகுமார். தஞ்சை ஓவியங்களிலும், அன்பளிப்புகளிலும் வர்ணங்களின் வாசனை மட்டுமின்றி நம் மண் வாசனையும் சேர்ந்து வீசுகிறது. புள்ளிக் கோலங்களில் அன்பளிப்புகள் எங்கே தோன்றியது இந்த யோசனை. கேட்டவுடன் தன்னைக் குறித்தும் தன் படைப்புகள் குறித்தும் பேசத் தொடங்கினார்.

“நான் ஸ்ருதி சிவகுமார். என்னுடைய சொந்த ஊர் கும்பகோணம், ஆனால் வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். பொறியியல் (Engineering) படித்து முடித்திருந்தாலும், எனக்குள் எப்போதும் ஓவியக் கலைக்கான ஒரு பெரிய ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது.

​பத்து வயதிலேயே எனக்கு வரைவதிலும் வண்ணம் தீட்டுவதிலும் ஆர்வம் தொடங்கிவிட்டது. ஆனால், அது ஒரு தீவிரமான விருப்பமாகவும், வாழ்க்கையின் பாதையாகவும் மாறியது என்

18-19 வயதில் தான். அதன் பிறகு, கவின் கலையில் (Fine Arts) டிப்ளமோ படிப்பை முடித்தேன்.

​தஞ்சாவூர் ஓவியங்கள், ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக், கலர் பென்சில், ஷேடிங், ஜென்டாங்கிள் ஆர்ட், நைஃப் ஆர்ட் என பல வடிவங்களில் வரைந்தாலும், என்னைக் கவர்ந்தது தஞ்சாவூர். இதில் ஏழு மாதங்கள் முழுநேரப் பயிற்சி பெற்று, சான்றிதழ் பெற்ற தஞ்சாவூர் ஓவியக் கலைஞராக மாறினேன்'' புள்ளிக் கோலங்களில் அன்பளிப்புகள் இந்த ஆலோசனை எப்படித் தோன்றியது. தொடர்ந்தார் ஸ்ருதி.

​‘‘ எனக்கு எதையும் ஆழமாக, நுணுக்கமாக வரைவது மிகவும் பிடிக்கும். ஒரு சிறிய கோட்டில் தொடங்கி, அதில் நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செய்வது எனக்குத் தனி மகிழ்ச்சி தரும். அந்த நுணுக்கமும், பாரம்பரியத் தொடுதலும் தான் என்னை ‘புள்ளிக் கோலங்கள்’ பக்கம் ஈர்த்தது. வாசலில் போடும் கோலத்தைத் தாண்டி, அந்த மரபுசார்ந்த அழகை நம்ம வீட்டு அலங்காரப் பொருட்களிலும், கைவினைப் பொருட்களிலும் கொண்டு வர விரும்பினேன். தஞ்சாவூர் ஓவியங்கள் தவிர்த்து அக்ரிலிக், ஆயில் பெயிண்டிங் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கான ‘ரிட்டர்ன் கிஃப்ட்ஸ்’ செய்கிறேன். புக்மார்க்குகள், கீ-செயின்கள், ஃப்ரிட்ஜ் மேக்னட்டுகள், கீ-ஹோல்டர்கள் எனப் பலவற்றிலும் இந்த பாரம்பரியக் கலைத் தொடுதலைக் கொண்டு வருகிறேன்‘ தஞ்சாவூர் ஓவியங்கள் பொதுவாகவே விலை அதிகம். உங்களிடம் எப்படி?  தொடர்ந்தார் ஸ்ருதி.

​பொதுவாகத் தஞ்சாவூர் ஓவியம் என்றால் பெரிய அளவிலும், அதிக விலையிலும், சாமி உருவங்கள் மட்டுமே கொண்டதாகவும் இருக்கும் என்ற பிம்பம் உண்டு. அதை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். பெரிய ஓவியங்களை வாங்க முடியாதவர்களுக்கும், தஞ்சாவூர் ஓவியங்களை தங்கள் வீடுகளில் சேகரித்து வைக்க ஆசை இருக்கும். அதற்காகவே, 22 கேரட் அசல் தங்கத் தகடுகளைப் பயன்படுத்தி, சிறிய அளவிலான தஞ்சாவூர் ஓவியங்களை 2/2, 3/3 அங்குல அளவில் உருவாக்கத் தொடங்கினேன். இதன் மூலம் வெறும் 1,000 ரூபாயிலிருந்தே உண்மையான தஞ்சை ஓவியங்களை மக்களால் வாங்க முடிகிறது. அளவைப் பொறுத்து இதன் விலை மாறுபடும். அதேபோல, நவராத்திரி மற்றும் பிற விசேஷங்களுக்கு ரூ.80 முதல் அக்ரிலிக் பெயிண்டிங் சார்ந்த நினைவுப் பரிசுகளையும் செய்து தருகிறேன் ‘‘இந்தத் தலைமுறை மக்களிடம் தஞ்சை ஓவியங்கள் குறித்த புரிதல் இருக்கிறதா?’’ கேட்டவுடன் முகம் மலர்ந்தார் ஸ்ருதி.

​‘‘நிச்சயமாகப் புரிகிறது . நான் அமைத்த கண்காட்சி ஸ்டால்களுக்கு வந்த இளைஞர்களும், குழந்தைகளும் கூட இதன் பாரம்பரிய மதிப்பைப் புரிந்து கொண்டு ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இந்தக் கலையின் சிறப்பைக் கடத்தியிருக்கிறார்கள்.

​அப்பா சிவகுமார், அம்மா மாதங்கி, இருவரும் கொடுத்த ஊக்கமும், இந்தக் கலைக்குக் கொடுத்த முக்கியத்துவமும் தான் நான் இன்னைக்குக் இந்த தஞ்சை ஓவியம் மேலே ஆர்வமா இருக்கக் காரணம். திருமணத்திற்குப் பிறகு, என் கணவர் ரமேஷ் கொடுத்த மிகப்பெரிய ஆதரவால்தான் என் கலைப் பயணத்தை அடுத்தகட்டத்திற்கு தீவிரமாகக் கொண்டு செல்ல முடிந்தது’’ என்னும் ஸ்ருதி ஓவியக்கலை தனக்கு தியானம் போன்றது என்கிறார்.

​‘‘எனக்கு ஓவியம் வரைவது வெறும் தொழில் மட்டுமல்ல, அது ஒரு யோகா அல்லது தியானம் போல. ஒரு மணி நேரம் யோகா செய்வதோ அல்லது மெடிடேஷன் செய்வதோ தரும் மன அமைதியை, எனக்கு 10 நிமிடம் ஓவியம் வரைவது கொடுத்துவிடும். அந்த அளவிற்கு எனக்குள் ஒரு அமைதியையும், பொறுமையையும் இந்த தூரிகை வேலைகள் தருகின்றன.

​நம் பாரம்பரியக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதிலும், எல்லோர் வீட்டிலும் ஒரு கலைப்படைப்பு இருக்க வேண்டும் என்பவதிலும்தான் என் மகிழ்ச்சி இருக்கிறது'' மனதாரச் சொல்கிறார் ஸ்ருதி சிவகுமார்.

- ஷாலினி நியூட்டன்.