நெல்லை: நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் பெயின்டர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை அரசு பள்ளி ஆசிரியர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (42), பெயின்டர். கடந்த 30ம் தேதி மாலையில் பாஸ்கரன் மொபட்டில் தச்சநல்லூர் பைபாஸ் ரோட்டில் சென்ற போது அந்த வழியாக பைக்கில் வந்த கும்பல், பாஸ்கரனை தலையை துண்டித்து கொலை செய்ததோடு, தலையை 200 மீட்டர் தூரம் தள்ளி வீசிச் சென்றது.
இந்த கொடூர கொலை தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தச்சநல்லூர் மணிமூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (24), பொன்ராஜ் (25), மகாராஜன் (28), வினோத் (28), மாயகிருஷ்ணன் என்ற கோபி (40), கட்டுடையார்குடியிருப்பைச் சேர்ந்த மகேந்திரன் (எ) வெள்ளத்துரை (28) ஆகிய 6 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன்கள் மதன் (26), பெருமாள் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 2 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மணிகண்டனின் சகோதரர்கள் ஆவர். மேலும் நடந்த தேடுதல் வேட்டையில் நேற்று அதிகாலை மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த விமல் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் சென்னையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலையுண்ட பாஸ்கரன் தனது உறவினர்களுடன் சேர்ந்து விமலை அரிவாளால் வெட்டியதாகவும், அந்த முன்விரோதத்தில் தற்போது பாஸ்கரன் கொலையில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுவரை இந்தக் கொலையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த கோபி என்ற மேலும் ஒரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுமாப்பிள்ளைக்கு சரமாரி வெட்டு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வடக்கு ரதவீதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் முத்துகணேசன் (29), தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மகேஸ்வரி என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதியினர், தெப்பக்குளம் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் முத்துகணேசனும், மகேஸ்வரியும், அருகிலுள்ள சந்திரசேகர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 2 பைக்கில் வந்த 4 பேர், வீட்டிற்குள் புகுந்து முத்துகணேசனை கை மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இதை பார்த்த மகேஸ்வரி கதறி அழுதார். அப்போது அவ்வழியாக பாம்பு பிடிப்பதற்காக சென்ற தீயணைப்பு துறையினர், முத்துகணேசனை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் முத்துகணேசனை வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் எட்டயபுரம் - கோவில்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



