வலி நிவாரண மாத்திரைகளை சென்னைக்கு அனுப்பிய மும்பை மெடிக்கல் ஷாப் உரிமையாளர் அதிரடி கைது: செம்பியம் போலீசார் சுற்றிவளைப்பு
பெரம்பூர்: சென்னைக்கு வலி நிவாரண மாத்திரைகளை அனுப்பிவைத்து விற்பனை செய்த மெடிக்கல் ஷாப் உரிமையாளரை மும்பையில் செம்பியம் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மும்பையில் இருந்து கடந்த 19ம் தேதி ஒரு கும்பல் சென்னைக்கு வலி நிவாரண மாத்திரைகளை கொண்டு வருவதாக சென்னை செம்பியம் இன்ஸ்பெக்டர் கோபாலுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்அடிப்படையில் தனிப்படை போலீசார் கண்காணித்து திருத்தணி ரயில் நிலையத்தில் மும்பையில் இருந்து வந்த ரயிலை சோதனை செய்து சந்தேகத்தின்படி, 4 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து 650 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜ் (25), அஜய் (21), ஜீவானந்தம் (20), டேனியல் (21) ஆகியோரை சிறையில் அடைத்தனர்.
முன்னதாக இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பை செம்பூர் பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் இருந்து இவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கியதும் ஜிபே மூலம் பணம் அனுப்பியதும் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் உடனே மாத்திரைகளை கொரியரில் அனுப்பிவைத்துள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மெடிக்கல் ஷாப் உரிமையாளரை கைது செய்ய கடந்த 27ம்தேதி செம்பியம் இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் போலீசார் விரைந்தனர். பின்னர் அவர்கள் மும்பை போலீசாரின் உதவியுடன் ஜாட்கோபர் குர்ஜி நகர் பகுதியை சேர்ந்த மையூர் பாலகிருஷ்ண சிண்டா (35) கைது செய்தனர்.
இவர் லைசென்ஸ் வைத்துக்கொண்டு மெடிக்கல் ஷாப் நடத்திவந்துள்ளார். சென்னையில் இருந்து செல்லும் நபர்கள் வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக கேட்கும்போது குறிப்பிட்ட ஏஜென்சியிடம் இருந்து வாங்கி விற்பனை செய்துள்ளார். அவரிடம் இருந்து 250 மாத்திரைகள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் டிராண்சிட் வாரண்ட் பெற்று நேற்றிரவு செம்பியம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



